விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரைத் தாக்கிய ஆண் பயணி ஒருவர், பேருந்தை மரத்தின்மீது மோதும் நோக்குடன் அதன் திருப்புசக்கரத்தை (steering wheel) பற்றினார்.
இந்தக் குழப்பத்தின்மீது தன் தாயாரின் முகத்தில் குத்துவிட்டதோடு காலாலும் உதைத்த அந்த ஆடவர், பின்னர் அவசரகாலச் சுத்தியலைக் கொண்டு பேருந்தின் கண்ணாடியை உடைத்தார்.
கூட்டாளி ஒருவர் முதலில் ஓரிடத்தில் சந்திக்கலாம் எனச் சொல்லிவிட்டு, பின்னர் இடத்தை மாற்றியதால் செங் யுவான் காங், 24, என்ற அந்த ஆடவர் ஆத்திரமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனையடுத்து, பேருந்தின் முன்பகுதிக்குச் சென்ற செங், ஓட்டுநருக்கு மும்முறை குத்துவிட்டு, பேருந்தை நிறுத்தும்படி கேட்டார்.
அதற்கு, விரைவுச்சாலையில் செல்வதால் உடனே நிறுத்த முடியாது என்றும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் செங் இறங்கிக்கொள்ளலாம் என்றும் ஓட்டுநர் கூறினார்.
அதனைக் கேட்ட செங், திருப்புசக்கரத்தைத் தன் இரு கைகளால் பற்றி, பேருந்தில் மரத்தில் மோத முற்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், பேருந்தின் பின்பகுதிக்குச் சென்ற செங், அங்கு அமர்ந்திருந்த தன் தாயார்மீது தனது ஆத்திரத்தைக் காட்டினார்.
இந்தக் குழப்பத்தின்போது, காவல்துறையை அழைக்கக்கூடாது என்று பேருந்திலிருந்த சக பயணிகளையும் அவர் மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி, தெம்பனிசை நோக்கிச் சென்ற பேருந்துச் சேவை எண் 969ல் இச்சம்பவம் நிகழ்ந்தது.
வேண்டுமென்றே காயம் விளைவித்தது, கண்மூடித்தனமாக நடந்துகொண்டது, கொன்றுவிடுவதாக மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட செங்கிற்கு புதன்கிழமை (பிப்ரவரி 26) 14 வாரங்கள், 10 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

