‘என்டியுசி லேர்னிங்ஹப்’ (NTUC LearningHub) அமைப்பில் பற்றவைப்பு (welding) பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய ஆடவருக்கு லஞ்சம் வாங்கியதற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தான் கற்றுத் தந்த பயிற்சி சவாலானது; இருந்தாலும் 100லிருந்து 200 வெள்ளி வரை தந்தால் தேர்வை வெற்றிகரமாகக் கடக்கத் தம்மால் உதவ முடியும் என்று அவர் தனது மாணவர்களிடம் கூறியிருக்கிறார். போதிய பணம் இல்லாத மாணவர்கள் அதைவிடக் குறைவான தொகையைக் கொடுக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
குற்றவாளியான சந்திரன் சாமு, அவ்வாறு லஞ்சமாக 26,000க்கும் அதிகத் தொகையைப் பெற்றிருக்கிறார். பிடிபடுவதற்கு முன்பு 2016லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் அத்தொகையை லஞ்சமாகப் பெற்றார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த 52 வயது சந்திரனுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) நான்கு மாதச் சிறைத் தண்டனையும் 26,570 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஊழல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் 21 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

