இஸ்ரேலியச் சின்னம் கொண்ட தொப்பி அணிந்தவரைத் தாக்கியவருக்குச் சிறை

இஸ்ரேலியச் சின்னம் கொண்ட தொப்பி அணிந்தவரைத் தாக்கியவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 7:54 pm

1 mins read

இஸ்ரேலியச் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்திருந்த 55 வயது ஆடவர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கிய நபருக்குத் திங்கட்கிழமை (நவம்பர் 2) மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, செங்காங்கில் உள்ள ரிவர்வேல் டிரைவ் பகுதியில் ஏலன் சிம் என்பவரைத் தாக்கியதாக 30 வயது சிங்கப்பூரரான முகம்மது அஷ்ரஃப் சையது நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பொது இடத்தில் வெளிநாட்டுத் தேசிய சின்னத்தைக் காட்சிப்படுத்திய பிறகு, ஏலன் சிம்முக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்திருந்தது. அச்செயல், வெளிநாட்டுத் தேசியச் சின்னங்கள் (காட்சிக்கு வைத்தலுக்கான கட்டுப்பாடு) சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், அந்தச் சின்னம் குறித்த கூடுதல் விவரங்கள் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

சென்ற ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி மாலை, சிம் அந்தத் தொப்பியை அணிந்திருந்ததைக் கண்ட அஷ்ரஃப் அவரைத் திட்டினார்.

பின்னர், அஷ்ரஃப் அவரைத் தாக்கினார். சிம்முக்குக் காயங்கள் ஏற்பட்டன. அதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சையை நாடினார்.

அன்றைய தினம் இரவு 10.40 மணி அளவில் அச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூன் மாதம் அஷ்ரஃப்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒருவரைத் தாக்கும் குற்றத்திற்கு, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்