திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது.
இருக்கையில் தலையை சாய்த்துக்கொள்ளும் பகுதி குறித்து தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சண்டை மூண்டது. இளையர் ஒருவர், மற்றோர் ஆடவர் அமர்ந்திருந்த இருக்கையின் தலை சாய்க்கும் பகுதியை வலுக்கட்டாயமாக உதைத்தார்.
பாதிப்புக்கு ஆளான ஆடவர், உதைத்த இளையரிடம் சென்றபோது இளையர் திரும்பி அந்த ஆடவரைப் படிக்கட்டில் தள்ளிவிட்டார். அதனால் ஆடவர் ஆறு படிக்கட்டுகளில் உருண்டு விழ நேரிட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கழுத்து, கீழ் முதுகு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
வேலை செய்ய முடியாததால் அவருக்கு 30 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. அவரின் மருத்துவச் செலவு 1,800 வெள்ளிக்கும் அதிகமாக இருந்தது.
குற்றவாளியான 25 வயது வோங் ஜுன் ஃபெங்குக்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இழப்பீடாக 93.09 வெள்ளி அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அந்தத் தொகை, பாதிக்கப்பட்ட ஆடவரின் மெடிசேவ் கணக்கிலிருந்துப் பயன்படுத்தப்பட்டது. அவரின் மருத்துவச் செலவின் எஞ்சிய தொகை காப்புறுதித் திட்டங்கள் மூலம் செலுத்தப்பட்டது.
எனினும், இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக கூடுதலாக ஒரு நாள் சிறைத் தண்டனையை நிறைவேற்ற வோங் முடிவெடுத்தார். வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை வோங் ஒப்புக்கொண்டார்.