கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த சான் ஹீ கெயோங், 51, எனப்படும் அவர், சீனப் புத்தாண்டு ஒன்றுகூடலின்போது மது அருந்தினார்.
அதன் பிறகு தமது குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு காரை ஓட்டிச் செல்ல முயன்றபோது, மரு அருந்தி இருப்பதால் தாம் காரை ஓட்ட அவரது மனைவி முன்வந்தார்.
ஆனால், அதற்குச் சம்மதிக்காமல் பிடிவாதமாக காரை ஓட்டினார்.
டாக்சியிலாவது செல்லுங்கள் என்று மனைவி மறுபடியும் கூறினார். அதனையும் அவர் பொருட்படுத்தவில்லை.
காரை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிய சான், போக்குவரத்து விளக்கு சிவப்பைக் காட்டியபோதும் சாலைச் சந்திப்பைக் கடந்து சென்றார்.
அதனால் வெறுப்படைந்த அவரது மனைவியும் இரண்டு மகன்களும் பாதி வழியிலேயே இறங்கி தனித்தனியாக வீட்டுக்குச் சென்றனர்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் அவர் இரண்டு குற்றங்கள் புரிந்ததாக புதன்கிழமை (மே 14) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் குற்றங்களுக்காக சானுக்கு இரு வார சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
மூன்று ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டக்கூடாது என்ற தடை உத்தரவும் அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டது.

