வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ‘சிம் ‘அட்டைமூலம் ஆடவர் ஒருவர் ஒன்பது நாள்களுக்குள் நான்கு அக்கம்பக்கக் காவல் நிலையங்களுக்கு 1,035 முறை தொலைபேசியில் அழைத்தார்.
ஃபூ ஜியா ஹோங், 37, எந்த அந்தச் சிங்கப்பூரர் வேடிக்கைக்காகவும் மகிழ்ச்சிக்காவும் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.
ஈசூன் (425 முறை), பிடோக் (308 முறை), கேலாங் (278 முறை), அங் மோ கியோ (24 முறை) ஆகிய அக்கம்பக்கக் காவல் நிலையங்களுக்கு அவர் அத்தகைய அழைப்புகளை மேற்கொண்டார்.
தொலைபேசி அழைப்புகளின்மூலம் காவல்துறை அதிகாரிகளைக் கடமையாற்றவிடாமல் வேண்டுமென்றே இடையூறு விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஃபூவிற்குப் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) 23 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற அக்கம்பக்கக் காவல் நிலையங்களுக்கும் அவர் அவ்வகையில் தொல்லை தந்ததாகச் சாட்டப்பட்ட மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் அங் மோ கியோவில், பயன்படுத்தப்பட்ட கைப்பேசி உறையை ஃபூ வாங்கியபோது அதனுள் அந்த ‘சிம்’ அட்டை இருந்ததாகக் கூறப்பட்டது.
ஈசூன் அக்கம்பக்கக் காவல் நிலையத்தை அவர் 425 முறை தொடர்புகொண்ட நிலையில், அவற்றில் 330 அழைப்புகளுக்குக் காவல்துறையினர் பதிலளித்தனர். எஞ்சிய நேரங்களில் அழைப்பு எடுக்கப்படவில்லை.
மற்ற அக்கம்பக்கக் காவல் நிலையங்களில் அவரது எத்தனை அழைப்புகளுக்குப் பதிலளிக்கப்பட்டது என்பது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஃபூ பயன்படுத்திய ‘சிம்’ அட்டை சிம்பா நிறுவனத்தினுடையது என்பதும் அது வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஊழியரை அதிகாரிகள் தொடர்புகொண்டபோது, அவர் அந்த ‘சிம்’ அட்டையை வீசி எறிந்துவிட்டதாகக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மே 11ஆம் தேதி ஃபூ கைதுசெய்யப்பட்டார்.


