தன்னிடம் முன்பு பயின்ற மாணவியை மூன்று முறை மானபங்கம் செய்த ஆசிரியருக்கு ஈராண்டுகள் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாணவி தொடக்கநிலை ஐந்திலிருந்து வேறு பள்ளியில் உயர்நிலை ஒன்று பயின்ற காலம் வரை மானபங்கத்துக்கு ஆளானார். 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குற்றவாளியான ஆண் ஆசிரியர் மாணவியை மானபங்கப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு சுமார் 560 வெள்ளியை இழப்பீடாகக் கொடுக்குமாறும் அந்த ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தொகையை வழங்காவிட்டால் ஆசிரியர் மேலும் ஒரு வாரம் சிறைத் தண்டனையை நிறைவேற்றவேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவி 10லிருந்து 13 வயதாக இருந்த காலகட்டத்தில் அவர் மானபங்கம் செய்யப்பட்டார். இப்போது 18 வயதாகும் அவர், மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளானது 2021ஆம் ஆண்டில் தெரிய வந்தது.
அவருக்கு முதன்மை ஆசிரியராகப் (form teacher) பணியாற்றிய 38 வயது ஆடவர் மீது சுமத்தப்பட்ட மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் நிரூபிக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர் எந்தப் பள்ளியிலும் வேலை செய்யவில்லை.
குற்றவாளியின் பெயரையும் அடையாளத்தையும் வெளியிட அனுமதி இல்லை.

