ஏமாற்றுவதற்காக சிங்கப்பூர் வந்த இரு சீன ஆடவர்களுக்குச் சிறை

ஏமாற்றுவதற்காக சிங்கப்பூர் வந்த இரு சீன ஆடவர்களுக்குச் சிறை

2 mins read
4282f6e4-b5ae-4b13-ba3d-a0e8e880abcd
லீ ஸுவிசிக்கு 15 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

திருடப்பட்ட கடனட்டை விவரங்களைக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்கும் நோக்கில், ஒரு கும்பலுடன் தொடர்புடைய இரு சீன ஆடவர்கள் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தனர்.

ஆனால், 36 வயதான லீ ஸுவிசி, ஸு ஸாவ்சென் என்ற அவ்விருவரும் அவ்வாறு செய்யவில்லை.

அவ்வாறு ஆடம்பரப் பொருள்களை வாங்கும்போது தங்களது அடையாளச் சான்றாகக் காட்டுவதற்கு ஏதுவாக போலிக் கடப்பிதழ்ப் பக்கங்களை அவர்கள் வைத்திருந்தனர்.

சக கூட்டாளிகளாகச் சந்தேகிக்கப்படும் ஸாவ் யோங்ஸி, 28, ஸாங் டியான்யு, 29 என்ற வேறு இரு சீனர்களையும் சிங்கப்பூரில் அவர்கள் சந்தித்தனர்.

ஆயினும், திட்டம் குறித்த விவரங்கள் தெரியவந்ததும் லீயும் ஸுவும் அதிலிருந்து பின்வாங்கினர்.

இருப்பினும், அந்நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) லீக்கு 15 வாரங்களும் ஸுவிற்கு எட்டு வாரங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றும் குற்றத்தில் ஈடுபட பிறருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதில் பங்கெடுத்ததாகத் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மற்ற இருவர்மீதான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

பிறரது கடனட்டை விவரங்களைக் கொண்டு, சிங்கப்பூரில் ஐஃபோன் போன்ற ஆடம்பரப் பொருள்களை வாங்குவதன்மூலம் பணம் ஈட்டலாம் என்றும் ஹுவிஹுவாங் என்பவர் லீயிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, தமது முன்னாள் வகுப்புத்தோழனான ஸுவைத் தொடர்புகொண்ட அவ்விவரத்தை லீ பகிர்ந்துகொள்ள, ஸுவும் அத்திட்டத்தில் இணைய ஒத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தம்மிருவரின் புகைப்படங்களையும் ஹுவிஹுவாங்கிற்கு லீ அனுப்பி வைத்தார். அவற்றைக் கொண்டு போலியான ஜப்பானியக் கடப்பிதழ்களைத் தயார்செய்த ஹுவிஹுவாங், அவற்றின் படங்களை லீக்கு அனுப்பிவைத்தார்.

குறிப்புச் சொற்கள்