போலிப் பணத்தை சிங்கப்பூருக்குக் கொண்டுவந்ததை ஒப்புக்கொண்ட மாதுக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தோனீசியாவைச் சேர்ந்த பெண்கள் இருவர், அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மொத்தம் $450,000 மதிப்பிலான சிங்கப்பூர் டாலர் பணத்தாள்களை இங்குக் கொண்டுவரும் சதித்திட்டத்தில் கூட்டாக ஈடுபட்டனர். தலா $10,000 மதிப்பிலான அந்த 45 நோட்டுகளும் போலியானவை என்று பின்னர் தெரியவந்தது.
அந்த இருவரில் ஒருவர் 51 வயது சோஃபியா மார்த்தா. அவர் ஜனவரி மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் $20,000க்குமேல் மதிப்புள்ள பணத்தாள்களை சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்த 33 வயது கோல் வின்னா மீதான வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
எல்லை தாண்டிப் பயணம் செய்யும்போது பணம் எடுத்துச் செல்வதை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் நடைமுறை, குற்றம் நடப்பதை அடையாளம் கண்டு, தடுப்பதற்கு உதவும் நோக்கம் கொண்டது என்பதை அரசாங்க வழக்கறிஞர் சுட்டினார்.
சோஃபியாவும் கோலும் பிடிபடாமல் போயிருந்தால் சிங்கப்பூரில் கணிசமான அளவில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்திருக்கும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

