கையூட்டு வாங்கிய தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிக்குச் சிறை

2 mins read
1a9461d3-3deb-4ad9-a0a2-063aaab824ea
ருஸ்டிமான் துப்புரவு நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்களிடமிருந்து கையூட்டு வாங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துப்புரவு நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்களிடமிருந்து $900 கையூட்டு வாங்கியதற்காகத் தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் நிர்வாக அதிகாரிக்கு 24 வார சிறைத் தண்டனையும் $2,420 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ருஸ்டிமான் சல்ஹான் முகமது சலிம் என்ற அதிகாரி ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மேலும் 10 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

பொது இடங்களில் ஊழியர்கள் மேற்கொண்ட துப்புரவு வேலைகளைச் சரிபார்ப்பது ருஸ்டிமானின் பணி. அந்தப் பணியின்போது மூன்று ஊழியர்களிடமிருந்து அவர் கையூட்டு பெற்றார். அவர்களில் இரண்டு பேரிடம் கூடுதலாக $1,800யைப் பெறவும் ருஸ்டிமான் முயற்சி செய்தார்.

ஊழியர்கள் சுத்தம் செய்த பகுதிகளை தான் மேற்பார்வையிட்டதால் கையூட்டு கொடுக்க அவர்கள் சம்மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் ருஸ்டிமான் பணம் கேட்டார்.

பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க தேசியச் சுற்றுப்புற வாரியம், ஒய்எஸ் யோங் செர்விசஸ் (YS Yong Services) போன்ற நிறுவனங்களைப் பணியமர்த்துகிறது என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஊழியர்கள் சுத்தம் செய்த பகுதிகள் தூய்மையாக உள்ளனவா என்பதை ருஸ்டிமான் போன்ற அதிகாரிகள் சரிபார்க்கின்றனர். அத்தகைய பணியின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதிகாரி அதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தகவல் அனுப்புவர்.

அதிகமான குறைபாடுகள் கண்டறியப்பட்டால் பணியமர்த்தப்பட்ட நிறுவனம் தேசியச் சுற்றுப்புற வாரியத்துக்குப் பெருந்தொகை செலுத்த வேண்டும்.

2017ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுவரை நிறுவனத்தின் மூன்று ஊழியர்களிடமும் மணமுறிவுக் கட்டணத்துக்காகவும் பிள்ளைகளின் தேவைகளுக்காகவும் ருஸ்டிமான் கடன் கொடுக்கும்படி கேட்டார்.

தொடக்கத்தில் தயங்கிய ஊழியர்கள் ருஸ்டிமானால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்று பணம் கொடுத்தனர். ருஸ்டிமான் அந்த மூவரிடமிருந்தும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

பின் 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ருஸ்டிமான்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மே 22ஆம் தேதி ருஸ்டிமானுக்கான பிணைத் தொகை $15,000 என்று விதிக்கப்பட்டது. இம்மாதம் 29ஆம் தேதி ருஸ்டிமானின் சிறைத் தண்டனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்