ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றின் சமையலறையில் வியாழக்கிழமை (நவம்பர் 19) இரவு ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஜாலான் புக்கிட் மேரா புளோக் 105ன் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட அந்தத் தீச்சம்பவம் குறித்து, வியாழக்கிழமை இரவு 8.15 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஊடகங்களுக்கு அளித்த பதிலில் தெரிவித்தது.
சமையலறையில் இரண்டு சமையல் பாத்திரங்களிலிருந்த பொருள்கள் தீப்பற்றியதாகக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கூறினர். தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே தீ தானாக அணைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
புகையைச் சுவாசித்ததற்காகப் பரிசோதிக்கப்பட்ட மூவர் பின்னர், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீச்சம்பவம் ஏற்பட்ட புளோக்கிலிருந்து ஏறக்குறைய 30 பேர் வெளியேற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சமையல் அடுப்பைப் கவனிக்காமல் விட்டது தீச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் தீச்சம்பவங்களுக்கான பொதுவான காரணங்களில் அதுவும் ஒன்று.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் வருடாந்தரப் புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஏற்பட்ட மொத்தத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 3 விழுக்காடு அதிகரித்து 2,050ஆகப் பதிவாகியுள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை (1,051) குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட தீச்சம்பவங்களாகும்.
