சிங்கப்பூரில் ஜப்பானியப் பாணியில் சாலை அமைப்பு

சிங்கப்பூரில் ஜப்பானியப் பாணியில் சாலை அமைப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2026 - 6:27 pm

1 mins read

உலகப் புகழ்பெற்ற ஜப்பானின் ‌தோக்கியோவில் உள்ள ஷிபுயா சாலையின் நடையர் கடக்குமிடம் போன்ற ஓர் நடையர் கடக்குமிடம் சிங்கப்பூரில் அமைய உள்ளது.

நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜூ சியாட் ரோடு, ஈஸ்ட் கோஸ்ட் ரோடு சந்திப்பில் அந்த நடையர் கடப்பிடம் சோதனை முறையில் தொடங்கும்.

போக்குவரத்தை மேம்படுத்தவும் நடையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மூன்று மாத சோதனை நடத்தப்படுகிறது.

அந்த நடையர் கடக்குமிடத்தில் அனைத்துத் திசைகளிலும் போக்குவரத்து விளக்குகள் ஒரே நேரத்தில் சிவப்பு நிறமாக மாறும். அப்போது நடையர்கள் குறுக்காகவும் அனைத்துத் திசைகளிலிருந்தும் சாலையைக் கடக்கலாம்.

சோதனைக் காலத்தின்போது, ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டிலிருந்து மவுண்ட்பேட்டன் ரோடு நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஜூ சியாட் ரோட்டில் வலப்பக்கம் திரும்ப அனுமதி இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் புதன்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தது.

அந்தச் சந்திப்பு சிறியது என்றாலும் நடையர்கள் நடமாட்டம் அதிகம் என்று ஆணையம் கூறியது.

புதிய கடப்பு வசதியால் நடையர்களுக்குப் பாதுகாப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், வாகன ஓட்டிகளும் நடையர்களும் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடலாம்.

புதிய ஏற்பாட்டால் வரும் சாதக பாதகங்களை ஆணையம் அணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்யும்.

சிங்கப்பூர்ச் சாலைகளை நடையர்களுக்கு உகந்ததாக மாற்ற ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சாலைநிலப் போக்குவரத்து ஆணையம்ஜூ சியாட்