சிங்கப்பூரில் ஜப்பானின் பிரம்மாண்ட டைனசோர் நேரடிக் காட்சி

சிங்கப்பூரில் ஜப்பானின் பிரம்மாண்ட டைனசோர் நேரடிக் காட்சி

படம்: டைனோ -அ-லைவ்

25 Oct 2026 - 3:53 pm

2 mins read

சுதந்திரமாக அசைந்தாடும் கனமான வால், தோலுக்கு அடியில் துடிக்கும் தசைகள், பற்களையே அதிரவைக்கும் அளவிற்கு பலத்த கர்ஜனை.

ஓர் உண்மையான டைனசோரை நேருக்கு நேர் காண்பது என்பது இனி வெறும் திரைப்படக் கற்பனை மட்டுமல்ல.

இந்த உயிரோட்டமுள்ள பிரம்மாண்ட உயிரினங்கள் நிலத்தை அதிரவைத்து நடப்பதையும் ஒன்றுடன் ஒன்று உரையாடுவதையும் மிக அருகில் சண்டையிடுவதையும் அவற்றிற்கு உணவாகிவிடுவோமோ என்ற எந்தவோர் ஆபத்தும் இன்றி, வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கே நேரில் சென்று நீங்கள் விரைவில் கண்டுகளிக்கலாம்.

ஜப்பானில் பெரும் வரவேற்பைப் பெற்ற நேரடி டைனசோர் நிகழ்ச்சி, முதன்முறையாக அந்நாட்டிற்கு வெளியே சிங்கப்பூரில் அரங்கேறவிருக்கிறது.

செந்தோசாவில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஒருங்கிணைந்த உல்லாசத்தல மாநாட்டு நிலையத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

‘டைனோ-அ-லைவ்’ தொடரின் மிக நவீன, அதிநவீனத் தயாரிப்பான ‘டைனசோர் ஒடிஸி’ எனும் அந்நிகழ்ச்சியில் உண்மை வடிவிலான 15 பிரம்மாண்ட டைனசோர்கள் மேடையில் வலம் வரவிருக்கின்றன.

வழக்கமான அருங்காட்சியகக் கண்காட்சிகள் போலவோ, திரைப்படக் காட்சிகள் போலவோ அல்லாமல், இந்த நிகழ்ச்சி, வாழும் வரலாற்றுக்கு முந்தைய உலகத்தின் நடுவே ரசிகர்களை நேரடியாகக் கொண்டுசேர்க்கும்.

டைனோ-அ-லைவ் நிகழ்ச்சியை உருவாக்கியவரான கஸுயா கானேமாரு, சில ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“மக்கள் எங்கள் டைனசோர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது, பலரும் ‘இது உண்மையில் உயிருடன் இருக்கிறதா?’ என்று ஒரு கணம் வியந்து யோசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

இந்த உயிரினங்களுக்குப் பின்னணியில் உள்ள ரகசியம், கானேமாருவின் தயாரிப்பு நிறுவனமான ‘ஆன்-ஆர்ட் கார்ப்’மூலம் ஜப்பானில் உருவாக்கப்பட்ட ‘டைனோ-டெக்னே’ என்ற காப்புரிமை பெற்ற இயந்திர உடைத் தொழில்நுட்பமாகும்.

உள்ளூர் அரும்பொருளகங்களுக்கு உதவ வேண்டும் என்ற எளிய விருப்பத்துடன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசைத் திட்டம் தொடங்கியதாகக் கூறுகிறார் கானேமாரு.

அரும்பொருளகப் பொறுப்பாளர்கள் எங்களிடம், ‘அருங்காட்சியகங்களுக்கு அதிக மக்களை ஈர்க்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான் ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் வெளியானது. அப்போது, ‘அரும்பொருளகத்திற்குள் நம்பமுடியாத அளவிற்கு தத்ரூபமான டைனசோர்கள் உண்மையில் சுற்றித் திரிந்தால் எப்படி இருக்கும்? அது நிச்சயமாக மக்களை உள்ளே கொண்டுவரும் அல்லவா?’ என்று யோசித்தேன். அந்தச் சிந்தனையே எங்கள் தொடக்கப் புள்ளியாக அமைந்தது,” என்று கானேமாரு சொன்னார்.

அவரது டைனசோர் தொகுப்பு தற்போது கிட்டத்தட்ட 40க்கு வளர்ந்துள்ளது. ஒவ்வொரு டைனசோரும் ஆரம்பக் கட்டத்திலிருந்து மேடையில் தோன்றுவதற்குத் தயாராகும் வரை ஏறக்குறைய ஆறு மாத கால உழைப்பு தேவைப்படுகிறது.

இந்த 70 நிமிட வசனங்களற்ற நிகழ்ச்சி, இயற்கையையும் வாழ்க்கையையும் கொண்டாடும் வகையில் இசை, நடன, நாடக உத்திகளை ஒருங்கிணைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி இளையர்க்கு, வாழும் உலகைப் புதிய பார்வையில் பார்க்க உற்சாகம் அளிக்கும் என்று கானேமாரு நம்புகிறார்.

குறிப்புச் சொற்கள்