தரமான, நீடித்த நீண்ட கால வருவாயை ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள தெமாசெக், வர்த்தக அடிப்படையில் செயல்பட்டு அதிகப்படியான வருவாயை ஈட்டுவதே அதன் நோக்கம் என்று நிதித் துறைக்கான மூத்த துணை அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, ஓய்வுபெற்றவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தத் தெமாசெக் நிறுவனத்தின் அனைத்துலக முதலீட்டைப் பயன்படுத்தலாமா என்ற அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாயின் கேள்விக்குப் பதிலளித்தபோது திரு சியாவ் அவ்வாறு கூறினார்.
பொருளியல் வளர்ச்சி, வேலை உருவாக்கம் போன்றவற்றுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமே தவிரத் தெமாசெக் வழிநடத்தக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் கூறினார்.
“தெமாசெக் நிறுவனம் வர்த்தக அடிப்படையில் செயல்பட்டு அதிகபட்சமாகப் பணத்தை ஈட்ட வேண்டும் என விரும்புகிறோம். எனவே, குறிப்பிட்ட துறைகளில் முதலீடு செய்ய அரசாங்கம் தெமாசெக் நிறுவனத்தைப் பணிக்காது. அத்துடன், தெமாசெக்கின் தனிப்பட்ட முதலீட்டு முடிவுகளை அரசாங்கம் முடிவு செய்யாது,” என்றார் திரு சியாவ்.
வரிக் கட்டமைப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது திரு சியாவ், இங்கு பணியாற்றுபவர்களில் மூவரில் ஒருவர் தனிப்பட்ட வருமான வரி எதையும் செலுத்துவதில்லை எனத் தெரிவித்தார்.
வரி செலுத்துபவர்களில் பத்தில் எட்டுப் பேர் 6 விழுக்காட்டுக்கும் குறைந்த வரி விகிதத்தைக் கொண்டுள்ளனர் என்பதையும் அவர் கூறினார்.

