போக்குவரத்து அமைச்சில் 2012 முதல் 2017 வரையில் பொதுத்துறை ஊழியராகச் செயல்பட்டதுடன், கடல்துறையிலும் விமானத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதாகவும் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் சேவை வழங்குநர், போக்குவரத்து ஊழியர்கள், பயணிகள் ஆகிய அம்சங்கள்வழி போக்குவரத்துக் கட்டமைப்புடன் இணைவதற்கு நேரம் செலவழித்ததாகவும் ஜூன் 11ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது திரு சியாவ் கூறினார்.
“அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள நான், இந்தப் பணியை ஏற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவாகியுள்ளது. இங்கு எல்லார்க்கும் வயது சற்று கூடிவிட்டாலும் வேலையும் சக பணியாளர்களும் முன்பே அறிமுகமானது என்ற முறையில் இங்கு திரும்பியது குறித்து மகிழ்கிறேன்,” என்றார் திரு சியாவ்.
போக்குவரத்து அமைச்சில் கடைசியாகப் பணியாற்றியபோது தாம்சன் ரயில் பாதைக்கான நிதிதிரட்டில் தாம் ஈடுபட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
“சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் அறிமுகம் செய்யப்பட்டபோதும் நான் அமைச்சில் இருந்தேன். தானியக்க வாகனங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் நாங்கள் குழு ஒன்றை 2013ல் அமைத்தோம்,” என்று அவர் சொன்னார்.
போக்குவரத்து அமைச்சின் அடுத்தகட்ட மூன்று இலக்குகளைத் திரு சியாவ் குறிப்பிட்டார்.
“நல்ல விளைவுகளை உண்டாக்க சிலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியத்தை விளக்குவது, முரண்படுவோரிடம் நிலைமையை எடுத்துக்கூறி வழிக்குக் கொண்டுவருவது, முடிவுகள் குறித்த மக்களின் நம்பிக்கையைப் பெறுவது ஆகியவற்றின்மீது எனது கவனம் இருக்கும்,” என்றார் அவர்.
போக்குவரத்து அமைச்சர் பொறுப்பு எளிதானதன்று எனத் திரு சியாவ் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரின் வரலாற்றுடனும் மக்களின் வாழ்க்கைமுறையுடனும் இயைந்த இந்தத் துறை, எல்லார்க்கும் முக்கியமானது.
“நடந்துசெல்வாேர், பேருந்து, ரயில், விமானம் பயன்படுத்துவோர், பொருள் விற்போர் என அனைவர்க்குமே போக்குவரத்து பற்றிய கருத்துகள் உள்ளன,” என்று அவர் சொன்னார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் நம்பிக்கையைப் பெற்றதுடன் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் பேசி, அவரது அறிவுரையைப் பெற்றதாகவும் திரு சியாவ் குறிப்பிட்டார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளின் போக்குவரத்து இணைப்புகளுடன் தொடர்பான இலக்குகளையும் அவர் விவரித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையில் தாம் பணியாற்றியபோது 80 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்களுக்குள் நடந்துபோகக்கூடிய தொலைவில் ரயில் நிலையங்கள் இருக்கவேண்டும் என இலக்கு வகுக்கப்பட்டதையும் திரு சியாவ் சுட்டினார்.
“அந்த இலக்கை எட்டும் நேரம் நெருங்கி வருகிறது. 2030ல் நம் ரயில் பாதைகள் எல்லாம் கட்டி முடிக்கப்படும். அப்போது இந்த இலக்கு அடையப்பட்டிருக்கும்,” என்று திரு சியாவ் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நகர மையத்திலிருந்து மேலும் தொலைவில் உள்ள வீவக குடியிருப்புப் பேட்டைகளின்மீது கவனம் செலுத்துவதும் இலக்காக இருக்கும் என்று அவர் சொன்னார்.
“அந்த வட்டாரங்களில் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு விரிவடைந்தால் பயண நேரம் குறையும்,” என்றார் அமைச்சர்.
போக்குவரத்துக் கட்டணங்கள் குறித்தும் பேசிய திரு சியாவ், கட்டண உயர்வு கட்டுப்படியாகவும் நீடித்த நிலைத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதையும் தமது அமைச்சு உறுதிசெய்ய விரும்புவதாகக் கூறினார்.
உதவி தேவைப்படுவோர்க்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும். போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழியாகவோ, விலைக்கழிவுத் திட்டங்கள் மூலமாகவோ அந்த ஆதரவு வழங்கப்படும்.
“போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ஒட்டுமொத்தமாகச் செய்யப்படும் நிதிச்செலவையும் அதன் தரத்தைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தையும் புரிய வைக்க நாங்கள் முற்படுகிறோம்,” என்று திரு சியாவ் கூறினார்.