தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா மூடல்: கூடுதல் சேவை வழங்கவுள்ள எஸ்ஐஏ

2 mins read
433de145-6381-4e1c-905e-00450cb0e275
எஸ்ஐஏ குழுமத்தின் விமானச் சேவைகளில் ஒன்றான ஸ்கூட். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா விமான நிறுவனம் அதன் சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமம் கூடுதல் சேவை வழங்கவிருக்கிறது.

அக்குழுமத்தின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலிவுவிலை விமானச் சேவையான ஸ்கூட் கூடுதல் பயணத் திட்டங்களை வழங்கவிருக்கிறது.

வரும் ஜுலை மாதம் 31ஆம் தேதி தனது சேவையை நிறுத்தவிருக்கும் ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா, சாங்கி விமான நிலையத்தில் வாரந்தோறும் சுமார் 180 சேவைகளை வழங்கிவந்துள்ளது. சென்ற ஆண்டு மொத்தமாகக் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா சேவையில் பயணம் செய்தனர்.

அந்த எண்ணிக்கை, சாங்கி விமான நிலையம் கையாண்ட மொத்த பயணிகள் எண்ணிக்கையில் ஏறத்தாழ மூன்று விழுக்காடாகும்.

ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா விட்டுச்செல்லவிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஸ்கூட், ஜப்பானின் ஒக்கினாவா, இந்தோனீசியாவின் லபுவான் பாஜோ ஆகியவற்றுக்குப் புதிதாக சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்திலிருந்து அந்த இரு பகுதிகளுக்கும் ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா மட்டும்தான் சேவை வழங்கி வந்துள்ளது.

ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா மூடலால் பாதிக்கப்பட்டுள்ள 16 பயணத் தடங்கள் சிலவற்றுக்கு எஸ்ஐஏ குழுமம் சேவை வழங்குமா என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர், வட்டார அளவில் விமானப் பயணத் தேவைக்கேற்ப தங்கள் விமானச் சேவைகள் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் கிடைப்பதையும் தங்களின் விமான நிறுவன பங்காளிகளின் நிலைப்பாட்டையும் பொறுத்து திட்டங்கள் வரையப்படும் என்று எஸ்ஐஏ வியாழக்கிழமை (ஜூன் 12) குறிப்பிட்டது.

“எஸ்ஐஏ குழுமம், விமானப் பயணங்களுக்கான தேவையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது, அதற்கேற்றவாறு அதன் கட்டமைப்பும் பயணத் திட்டங்களும் மாற்றப்படும்,” என்று எஸ்ஐஏ குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்