வீடு புகுந்து திருடுவதற்காகவே சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு ஆடவர்கள், டிசம்பர் 17ஆம் தேதி தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.
சீனாவில் இயங்கிவந்த சட்டவிரோதக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த 38 வயது லோங் ஸிஹுவா, 44 வயது லுவோ சாங்சாங் ஆகிய இருவரும் வின்சோர் பார்க் ரோட்டில் வேலி ஏறி ஒரு வீட்டுக்குள் சென்று $570,100 மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்தனர்.
இருவரும் சீனாவுக்குத் திரும்புவதற்குள் அதிகாரிகளிடம் சிக்கினர். இருப்பினும், $390,200 மதிப்பிலான நகைகளை அவற்றை இழந்த 53 வயது பெண்ணுக்கு அதிகாரிகளால் மீட்டுத் தர முடியவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட இவ்விருவரையும் தவிர, சீனாவைச் சேர்ந்த குறைந்தது ஐவர் இவ்வாண்டு ஜூன் மாதம் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் இதே நோக்கத்துடன் வந்ததாகக் கூறப்படுகிறது.
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் குறித்து இவ்வாண்டு பல புகார்கள் செய்யப்பட்டன. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ரயில் காரிடர், புக்கிட் தீமா ரோடு பகுதிகளில் உள்ள தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் 10 சம்பவங்கள் நடந்திருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு $3.85 மில்லியன் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதில் ஒரு பகுதியை மட்டுமே மீட்க முடிந்தது.
லோங், லுவோ இருவரும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
சிங்கப்பூருக்கு லோங் ஜூன் 19ஆம் தேதி அன்றும் லுவோ ஜூன் 29ஆம் தேதி அன்றும் வந்ததுடன் ஜூன் 29ஆம் தேதி மீண்டும் சீனாவுக்குத் திரும்பப் பயணச்சீட்டுகள் வைத்திருந்தனர்.
எந்த வீட்டைக் குறிவைக்கலாம் என்று ஜூன் 21ஆம் தேதி வின்சோர் பார்க் ரோட்டிலுள்ள குடியிருப்பு வட்டாரத்தை வலம்வந்த பிறகு, இரவு 7.40 மணி வாக்கில் இருவரும் ஒரு மீட்டருக்குச் சற்று உயரமான வேலிச் சுவரைத் தாண்டிக் குதித்ததாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருவருக்கும் ஜனவரி 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.