நகைக் கடை ஒன்றில் உதவி மேலாளராகப் பணியாற்றிய ஆடவர் ஒருவர், தான் வேலை செய்த இடத்திலிருந்து $216,000க்கும் மேல் மதிப்புள்ள 24 தங்க நகைகளைத் திருடியுள்ளார்.
அவற்றில் ஆறு நகைகளை, ‘தாவ்பாவ்’ இணையத் தளத்தில் வாங்கிய போலி நகைகளுடன் அவர் மாற்றி வைத்தார்.
ஈசூன் சென்ட்ரல் 1க்கு அருகில் உள்ள நார்த்பாயிண்ட் டிரைவில் செயல்படும் ‘சிஎச்ஜெ சிங்கப்பூர் ஜுவல்’ எனும் கடையில் 31 வயது டேரன் வாய் முன் ஜுன் அப்போது பணியாற்றி வந்தார்.
மீதமுள்ள 18 நகைகளைக் கடையில் இருந்த வேறு சில நகைகளுடன் அவர் மாற்றி வைத்தார். அதன் பிறகு, அவர் அந்த 24 தங்க நகைகளையும் அடகு வைத்தார். ஆனால், அவற்றுக்கு $131,000க்கும் மேலான பணத்தை மட்டுமே அவர் பெற்றார்.
அந்தப் பணத்தைச் சூதாடுவதற்கும் தனது கடன்களை அடைப்பதற்கும் அவர் பயன்படுத்தினார்.
இரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் குற்ற நடத்தை மூலம் கிடைத்த பலன்களைப் பெற்றதற்கான ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) அவருக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் திருடப்பட்ட 18 நகைகளை அடகுக் கடைகளிலிருந்து கைப்பற்றியுள்ளனர். அவர் இதுவரை எந்த இழப்பீடும் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது பிணைத் தொகை $15,000ஆக நிர்ணயிக்கப்பட்டது. அவர் செப்டம்பர் 3ஆம் தேதி சிறைத் தண்டனையைத் தொடங்குவார்.


