சிறுநீரகச் சுத்திகரிப்பு நோயாளிகளுக்கு வேலைவாய்ப்புக் கண்காட்சி

சிறுநீரகச் சுத்திகரிப்பு நோயாளிகளுக்கு வேலைவாய்ப்புக் கண்காட்சி

2 mins read
bada1807-f022-4858-870b-5133befa4b5f
தேசியச் சிறுநீரக அறக்கட்டளையும் ‘த சோ‌‌ஷியல் எகுவிட்டி’ (The Social Equity) அமைப்பும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்புக் கண்காட்சி மூலம் 40 வயது திருவாட்டி மாலதி நாகரத்னத்திற்கு வேலை கிடைத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சையை மேற்கொள்வோரையும் பணியமர்த்த நடத்தப்பட்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேசியச் சிறுநீரக அறநிறுவனமும் ‘த சோ‌‌ஷியல் எகுவிட்டி’ (The Social Equity) அமைப்பும் இணைந்து கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி அனைவரையும் உள்ளடக்கும் வகையிலான வேலைவாய்ப்புக் கண்காட்சியை நடத்தியது.

அந்தக் கண்காட்சி மூலம் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை மேற்கொள்ளும் 12 பேருக்கு வேலை கிடைத்தது.

‘த சோ‌‌ஷியல் எகுவிட்டி’ அமைப்பு நேரடி வேலைவாய்ப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்வதுடன் இணையத்தள வேலைவாய்ப்புகளையும் விளம்பரப்படுத்துகிறது. தற்போது அந்தத் தளங்கள் மூலம் 50,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

சிறுநீரகச் சுத்திகரிப்பை மேற்கொள்ளும் 5,400க்கும் அதிகமானோரில் ஏறக்குறைய 37 விழுக்காட்டினர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் என்றும் 21 விழுக்காட்டினர் வேலை செய்கின்றனர் என்றும் தேசியச் சிறுநீரக அறநிறுவனம் குறிப்பிட்டது. கிட்டத்தட்ட 42 விழுக்காட்டினர் அதாவது 2,285 பேர் தற்போது வேலை இல்லாமல் உள்ளனர்.

அவர்களில் பாதிப் பேர், அதாவது ஏறக்குறைய 1,090 பேர் வேலை தேடினாலும் வேலைவாய்ப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அத்தகையோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த தேசிய சிறுநீரக அறநிறுவன சமூக வேலைவாய்ப்புக் கண்காட்சி 18 முதலாளிகளைச் சேர்த்துக்கொண்டது.

வேலையிடக் கண்காட்சி மூலம் பணியமர்த்தப்பட்ட நோயாளிகளில் ஒருவர் 40 வயது திருவாட்டி மாலதி நாகரத்னம். ஒன்பது வயதில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு நாளும் இன்சுலின் போட்டுக்கொள்ளவேண்டிய சூழலுக்கு ஆளானார்.

பொது மருத்துவமனை ஒன்றில் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளராகப் பணியாற்றிய அவர் 2021ஆம் ஆண்டு பணியிலிருந்து விலகினார்.

2022ஆம் ஆண்டு அவரது சிறுநீரகங்கள் செயலழிந்தன. அதையடுத்து சிறுநீரகச் சுத்திகரிப்புக்குச் சென்ற அவருக்கு வேலையிடக் கண்காட்சி மூலம் சிடெல் கடையில் வேலை கிடைத்தது.

நிறுவனங்கள் வழக்கமாக சிறுநீரகச் சுத்திகரிப்பை மேற்கொள்வோருக்கு ஏற்ப நீக்குப்போக்கான வேலையிடச் சூழலை ஏற்பாடு செய்வதாக முதலாளிகள் தெரிவித்தனர்.

அதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வேலையிடத்தை உருவாக்க முடிவதாக முதலாளிகள் தெரிவித்தனர்.

சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்வோருக்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தருவதால் அவர்களுக்கும் அது வசதியாக இருப்பதாக நோயாளிகள் குறிப்பிட்டனர்.

நோயாளிகள் வேலையில் அமர்த்தப்பட்டு நிலையாகும்போது அவர்களின் நம்பிக்கை மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று தேசிய சிறுநீரக அறநிறுவனம் குறிப்பிட்டது.

அறநிறுவனமும் ‘த சோ‌‌ஷியல் எகுவிட்டி; அமைப்பும் இன்னும் பல வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிடுகிறது.

குறிப்புச் சொற்கள்