சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு

சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு

படம்: வெளிநாட்டு ஊழியர் நிலையம்

07 Nov 2026 - 11:54 am

2 mins read

சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் பல ஊழியர்கள் பலனடைந்தனர். இந்த ஏற்பாட்டில் சில ஊழியர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட்டன. சம்பளம் கிடைக்காத சில ஊழியர்களுக்கு சம்பளமும் கிடைத்தது.

சனிக்கிழமை (நவம்பர் 6) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து வேலை நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பங்களாதேஷ் ஊழியரான ரப்பானி முகமது கோலாம், தன்னுடைய வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

வெறும் பத்து வெள்ளி மட்டுமே கையில் இருந்த நிலையில் தனக்கு வர வேண்டிய இரண்டு மாதச் சம்பளத்தைப் பெறுவதற்காக 21 வயதான அவர் கவலையுடன் காத்திருந்தார்.

பங்ளாதேஷின் மேற்கு ராஜஷாஹி மாவட்டத்திலிருந்து கடந்த ஏப்ரலில் சிங்கப்பூருக்கு வந்த அவர், தான் முன்பு ஈட்டிய வருமானத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வெள்ளியையும் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்தார்.

கடந்த அக்டோபரில் நிலுவையில் உள்ள சம்பளத்துக்காக கோரிக்கை விடுத்த 230க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய முதலாளிகளுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இதில் பலன் அடைந்தவர்களில் ரப்பானியும் ஒருவர்.

அதே சமயத்தில் அவர்களில் சிலருக்கு நிலுவையில் இருந்த ஊதியமும் கிடைத்துள்ளது.

நவம்பர் தொடக்கத்தில் நிலுவை சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட ‘புராசஸ் மெயின்டனன்ஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவன ஊழியரான ஆலம் முகமது சபீர், “எனது சம்பளம் கிடைத்துவிட்டதால் எனக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது, எனது குடும்பத்திற்கு பணத்தை அனுப்பிவிடுவேன்,” என்றார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ரப்பானி, சபீர் மற்றும் பல ஊழியர்கள், வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) செங்காங் வெஸ்ட்டில் உள்ள மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்களை கட்டுமான நிறுவனங்களும் இதர நிறுவனங்களும் நேர்காணல் செய்ததாகத் தெரிவித்தனர்.

அந்த நிகழ்வின் சூழலை விவரித்த ஹசன் முகமது கம்ருல், “அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டும், ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டும் இருந்தனர், அது ஒரு திறந்தவெளி இடமாக இருந்திருந்தால் ஒரு ஆரவாரமான கூட்டமாக மாறியிருக்கும்,” என்று கூறினார்.

பெரும்பாலும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இவர்களுக்கு, ஊதியம் கிடைக்காததால் அவர்கள் பணியாற்றிய ‘புராசஸ் மெயின்டனன்ஸ் சொல்யூஷன்ஸ்’, ‘ஜூரோங் டெக்னிக்கல் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’ ஆகிய இரண்டு நிறுவனங்களையும் மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது.

‘புராசஸ் மெயின்டனன்ஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட 120 ஊழியர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நிலுவைச் சம்பளம் கிடைத்துவிட்டதாகக் கூறினர். ஆனால் ‘ஜூரோங் டெக்னிக்கல் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள், தங்களுக்கு இன்னமும் சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்