சிங்கப்பூரில் 7 மாதம் காணாத உச்சத்தில் வேலைவாய்ப்புகள்

‘இண்டீட்’ இணையத்தள அறிக்கை

சிங்கப்பூரில் 7 மாதம் காணாத உச்சத்தில் வேலைவாய்ப்புகள்

2 mins read
26abb053-6f91-4150-ad66-9701b992ef20
சிங்கப்பூரின் ஊழியரணியை வைத்துப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்படுவதாக ‘இண்டீட்’ இணையத்தளம் குறிப்பிட்டது.  - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகள் இவ்வாண்டு ஜனவரி நிலவரப்படி தொடர்ந்து மூன்றாவது மாதமாய்க் கூடியிருப்பதாக ‘இண்டீட்’ (Indeed) இணையத்தளம் கூறுகிறது.

ஓராண்டாகச் சற்றுத் தணிந்திருந்த ஊழியர் சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதை அது காட்டுகிறது.

ஆண்டு அடிப்படையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 11.3 விழுக்காடு குறைந்தபோதும் சென்ற ஆண்டு (2025) ஜூனுக்குப் பிறகு முதன்முறையாக உச்சத்தைத் தொட்டது. இண்டீட் இணையத்தளம் புதன்கிழமை (மார்ச் 4) வெளியிட்ட அறிக்கையில் அந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்குள்ள ஊழியரணியை வைத்துப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்படுவதாக அது குறிப்பிட்டது.

ஆண்டு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கான உத்தேசக் காரணத்தையும் அது முன்வைத்தது. கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வேலைக்கு ஆள் எடுக்கும்போக்கு வெகுவாக அதிகரித்து இப்போது வழக்கநிலைக்குத் திரும்பியிருப்பதை அது காட்டுவதாக இண்டீட் குறிப்பிட்டது.

நிரப்பப்படாமல் இருக்கும் வேலைகளின் விகிதம், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சத்தில் இருந்தது. அப்போது 43 விழுக்காடாக இருந்த அது, ஜனவரியில் 38 விழுக்காட்டுக்குக் குறைந்தது. இருப்பினும் வேலையின்மை விகிதத்தைக் குறைவாக வைத்திருக்கும் அளவுக்குத் தொடர்ந்து போதிய வேலைவாய்ப்புகள் இருப்பதாக இண்டீட் தெரிவித்தது.

பரந்துபட்ட மீட்பு

அண்மை மாதங்களில் வேலைவாய்ப்புகள் பரந்துபட்ட அளவில் மீட்படைந்தன. கடந்த மூன்று மாதத்தில் இண்டீட் இணையத்தளத்தில் பதிவிடப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 விழுக்காடு கூடியது.

சமூக அறிவியல் துறையில் கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்புகள் 26 விழுக்காடு அதிகரித்தன. அவற்றின் உயர்வு, தகவல்தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் 25 விழுக்காடாகவும் மென்பொருள் உருவாக்கத்தில் 23 விழுக்காடாகவும் இருந்தன.

சுகாதாரப் பராமரிப்பு, வாழ்வியல் துறைகளிலும் அதிக வேலைவாய்ப்புகளைக் காணமுடிந்தது.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

எண்ணிக்கையைத் தவிர்த்து, ஊழியர்களிடம் எதிர்பார்க்கப்படும் திறன்களிலும் மாற்றம் இருந்ததாக இண்டீட் தெரிவித்தது.

இவ்வாண்டு (2026) ஜனவரியில் சிங்கப்பூரில் பதிவிடப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புகளிலும் ஏறக்குறைய 23 விழுக்காட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஓராண்டுக்கு முன்பிருந்த 12 விழுக்காட்டைப் போன்று அது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.

சிங்கப்பூர், சென்ற வாரம் புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவுச் செயல்விளைவுத் திட்டத்தை அறிவித்தது. ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்த 100,000 ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பது அதன் நோக்கம்.

உலக அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை வேகமாகப் பயன்படுத்திவருகிறது. சிங்கப்பூர், ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் தொழில்நுட்ப நடுவமாகத் திகழ்வதை அது பிரதிபலிப்பதாக இண்டீட் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்