தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் நிலநடுக்கத்தால் சிங்கப்பூர்க் கட்டடங்களுக்குப் பாதிப்பில்லை: பிசிஏ

1 mins read
55c7a339-7b81-46e6-af3a-cf7f3d13a3d8
ஜோகூர் நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர்க் கட்டடங்களில் நிறுவப்பட்டுள்ள அதிர்வு உணர்கருவிகள் எதுவும் தூண்டப்படவில்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் ஜோகூரில் ஏற்பட்ட 4.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் சிங்கப்பூர்க் கட்டடங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட, அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு நடப்பிலுள்ள விதித்தொகுப்புகளின் அடிப்படையில் இங்குள்ள கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று செவ்வாய்க்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிசிஏ பதிவிட்டுள்ளது.

“போதுமான வலுவுடன் இருக்கும் வகையிலும் வெகுதொலைவில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உருவாகும் நில அதிர்வுகள் உள்ளிட்ட வெளிப்புறத் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலும் நமது கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சிங்கப்பூர்க் கட்டடங்களில் நில அதிர்வுகள் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட பிசிஏவும் மற்ற அமைப்புகளும் நிகழ்நேரத் தரவுகளைக் கண்காணித்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு ஜோகூர் மாநிலத்தின் சிகாமட் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நகரம் சிங்கப்பூரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அதனால் சிங்கப்பூர்க் கட்டடங்களில் நிறுவப்பட்டுள்ள அதிர்வு உணர்கருவிகள் எதுவும் தூண்டப்படவில்லை என்று பிசிஏ தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்