தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் எண்ணெய்க் கசிவு நின்றது; சிங்கப்பூரில் சுத்திகரிப்புப் பணிகள்

2 mins read
fc640359-f976-47e0-bd79-4ad39f7d0df3
சாங்கி கடற்கரை, உபின் தீவுகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் எண்ணெய்க் கசிவு காணப்பட்டது. - படம்: சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம்

ஜோகூர் ஆற்றில் லாங்சாட் கப்பல் முனையத்துக்கு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு நின்றுவிட்டது.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சாங்கி, பாசிர் ரிஸ் கடற்கரைகள், உபின் தீவுக்கு அருகே உள்ள பகுதி ஆகியவற்றில் காணப்பட்ட எண்ணெய்யைச் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்கின்றன.

ஜோகூர் ஆற்றுக்கு அருகே இருக்கும் லாங்சாட் முனையத்தில் எண்ணெய்க் கசிவு காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு எண்ணெய்ச் சுத்திகரிப்புப் பணிகள் நடந்து வருவதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசியச் சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகிய மூன்றும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உபின் தீவின் வடகிழக்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதியிலும் சாங்கி கடற்கரையின் சில பகுதிகளிலும் பாசிர் ரிஸ் கடற்கரையின் ஒரு பகுதியிலும் கசிந்த எண்ணெய் காணப்பட்டது. ஒருவேளை கடற்பகுதிகளில் மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டால் சுத்தம் செய்ய உபின் தீவுக்கு அருகே கூடுதலாக ஒரு ‘கடல் எண்ணெய் அகற்றுக் கப்பல்’ (Marine Oil Sweeper) பணியில் ஈடுபடுத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சாங்கி கடற்கரையின் சில பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இதுகுறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் வரை சாங்கி, பாசிர் ரிஸ் கடற்கரைகளில் நீச்சல் உள்ளிட்ட நீர் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அமைப்பு, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எண்ணெய்ச் சுத்திகரிப்புப் பணிகள் தொடர்பில் மேல் விவரங்கள் அளிக்கப்படும் வரை செக் ஜாவா சதுப்புநிலம் தற்காலிகமாகப் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலிலோ கடற்கரையிலோ வேறு எந்த எண்ணெய்க் கசிவும் இதுவரை காணப்படவில்லை என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் சொன்னது.

குறிப்புச் சொற்கள்