ஜோகூர் பாருவின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) அறிவித்தது.
“அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாலும் மலேசிய காவல்துறையினர் பல்வேறு ஜமாஆ இஸ்லாமியா அமைப்பினரைத் தேடிவரும் சூழலில் நிலவுவதாலும் இன்று நாங்கள் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்,” என்று சனிக்கிழமை மாலை அறிக்கை ஒன்றில் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கூடுதல் சுற்றுக்காவல் நடவடிக்கைகள், பயணிகளிடம் கூடுதல் சோதனைகள் உள்ளிட்டவை முடுக்கிவிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது. அதனால் பயணிகள் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளைக் கடக்கக் கூடுதல் நேரம் ஆகலாம் என்றும் அது சொன்னது.

