ஜோகூர்பாரு: விரைவில் தொடங்கப்படவிருக்கும் ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் மண்டலத்தில் பங்கேற்க விரும்பும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ஓசிபிசி வங்கி, பிரத்தியேகக் குழு ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.
இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 15 வங்கி அதிகாரிகளும் மலேசியாவைச் சேர்ந்த 10 வங்கி அதிகாரிகளும் இடம்பெற்று உள்ளனர். இந்தக் குழு, சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கும்.
அதுமட்டுமல்லாமல் பொருளியல் வட்டாரத்திற்குள் செயல்படும் நிறுவனங்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பாலமாக அக்குழு செயல்படும்.
ஓசிபிசி அனைத்துலக நிறுவனங்களுக்கான வங்கிப் பிரிவின் தலைவரான ராய் டான், “ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றார்.
ஆசியானுக்கு வெளியே முதலீடுகளை ஈர்ப்பதில் ஓசிபிசி கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓசிபிசியின் பிரத்தியேகக் குழு, சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் நுழைய விரும்பும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவ முனைப்புடன் இருக்கிறது.
தற்போது ஓசிபிசியின் 38 கிளைகள் மலேசியாவில் செயல்படுகின்றன. ஜோகூரில் மட்டும் ஓசிபிசிக்கு எட்டு கிளைகள் உள்ளன.