முக்கியத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் புதிய ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் அமைத்துள்ளன.
உற்பத்தி, தளவாடம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுப்பயணம், எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல், நிதிச் சேவைகள், வர்த்தகச் சேவைகள், கல்வி, சுகாதாரம் ஆகியவையே அந்த 11 முக்கியத் துறைகளாகும்.
இரு நாடுகளும் அடுத்த பத்தாண்டுகளுக்கு 100 திட்டங்களை வகுத்து, 20,000 திறன் அடிப்படையிலான வேலைகளை உருவாக்க இலக்குக் கொண்டுள்ளன.
சிங்கப்பூரில் குறிப்பிட்ட சில துறைகளும் பங்குகளும் பலனடையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், அமெரிக்க - சீன வர்த்தக நெருக்கடிகளால் வேறு பகுதிகளுக்கு மாறிச்செல்லும் விநியோகச் சங்கிலிகளை ஈர்க்கக்கூடும் என்று ‘மேபேங்க்’ அறிக்கை ஒன்றில் கூறியது.
பொருளியல் மண்டலத்திலிருந்து வங்கித் துறை, மின்னணு விளையாட்டுத் துறை, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்ற சிங்கப்பூரில் உள்ள துறைகள் பலனடையும் என்றும் அது சொன்னது.
கடந்த ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், சிங்கப்பூர் வங்கிகள் வட்டார அளவில் தங்கள் ஒட்டுமொத்த, சில்லறை வங்கிமுறையை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் முதலீடு செய்துவருவதாக ‘மேபேங்க்’ கூறியது.
இதன்மூலம், வட ஆசியாவிலிருந்து ஆசியானுக்கு மாறும் விநியோகச் சங்கிலிகளை அவற்றால் ஈர்க்கமுடிகிறது என்றும் அது சொன்னது.
தரவு நிலைய நடுவமாக ஜோகூரின் நிலை, சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்குப் பிறகு மேலும் வலுவடையலாம் என்றும் முக்கிய முதலீடுகளை அது ஈர்க்கக்கூடும் என்றும் ‘மேபேங்க்’ தெரிவித்தது.