ஜோகூர் பாரு - ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், வரி விதிப்பால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற சூழலில் வர்த்தகங்களின் விநியோகச் சங்கிலித் தொடர் வலுப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியிருப்பதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
வர்த்தக, தொழில் அமைச்சரான திரு கான், மலேசியாவின் ஜோகூர் பாருவில் (ஏப்ரல் 21) நடைபெற்ற வர்த்தக, முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார். உலக அளவில் தன்னைப்பேணித்தனப் போக்கு அதிகரித்து வரும் நிலையில் சரியான தருணத்தில் மிகவும் முக்கியமான மாநாடு நடைபெறுவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தால் ஒன்று மற்றதன்மீது பதில் வரிகளை விதித்துள்ளது. அதனால் உலகின் இரண்டு பெரிய பொருளியல்களுக்கு இடையிலான வர்த்தகம் தடைப்பட்டுள்ளது.
அது, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள வர்த்தகங்கள்மீது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற திரு கான், அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்கு இடையிலான உற்பத்தி, விநியோகச் சங்கிலித் தொடர் பல வர்த்தகங்கள் சார்ந்திருப்பதாகச் சொன்னார்.
எனவே, ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் போன்ற திட்டங்கள் ஒரே கண்ணோட்டமுள்ள நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்பட்டு சவால்களைச் சமாளிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார் திரு கான்.
“ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், வர்த்தகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலித் தொடரை வலுப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது. அதன் மூலம் வர்த்தகங்கள் தொடர்ந்து வளர முடியும்,” என்று திரு கான் தமது உரையில் கூறினார்.
சிறப்புப் பொருளியல் வட்டாரம் உற்பத்தி, தளவாடம், தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொருளியல் ஆகிய பல முக்கிய துறைகளில் எல்லை தாண்டிய வர்த்தகத்தையும் முதலீட்டையும் நெறிப்படுத்த முற்படுகிறது.
“சிறப்புப் பொருளியல் வட்டாரம் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறுதியான, நீண்டகால பொருளியல் பங்காளித்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அது வர்த்தகங்களுக்குப் புதிய பாதையை அமைத்துள்ளது,” என்றார் திரு கான்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி பல நாடுகளின் இறக்குமதிக்கு எதிராக வரிகளை விதிப்பதாக அறிவித்தார். பெரும்பாலான நாடுகள் மீதான வரிகள் ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உலக வர்த்தகம் குழப்பத்திலும் பதற்றத்திலும் மூழ்கியுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர் மீது 10% அடிப்படை வரியையும், மலேசியா மீது 24% வரியையும் விதித்துள்ளது.