தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
1,900க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் கூட்டு ஆயுதப்படைப் பயிற்சி

3 mins read
d62ba824-a8b6-45c9-b5d4-2cf231c214e3
கப்பலிலிருந்து கரைக்கு வரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர், ஆஸ்திரேலியப் படையினர். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர் ஆயுதப் படையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் இணைந்து 1,900க்கும் மேற்பட்டோரை உள்ளடக்கிய இருதரப்புக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ராணுவம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை என முப்படைகளும் கலந்துகொள்ளும் ‘எக்சர்சைஸ் டிரைடன்ட்’ (Exercise Trident) எனும் இந்தப் பயிற்சி, ஆஸ்திரேலியாவின் ராக்ஹேம்டனின் ஷோல்வாட்டர் பே பயிற்சிப் பகுதியில் நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியின்போது இருநாட்டுப் படைகளும் கப்பலிலிருந்து கரைவரை கடற்படையின் Fast Craft Utility (FCU), Fast Craft Equipment and Personnel (FCEP) ஆகிய அதிவேக படகு வகைகளைக் கொண்டு கடல்வழி படைகளையும் வாகனங்களையும் செலுத்துவர். ‘FCU’ படகு 18 டன் எடையை ஏற்றிச்செல்லும் ஆற்றலுடையது.

அந்த இருவகை படகுகளும் கடற்படையின் Landing Ships Tank (LST) எனும் கவச வாகனங்களையும் சரக்குகளையும் சுமந்து செல்லும் இரு போர்க்கப்பல் வகைகளான ஆர்எஸ்எஸ் என்டூயரன்ஸ் (RSS Endurance), ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் (RSS Persistence) ஆகியவற்றிலிருந்து செலுத்தப்படுகின்றன.

RSS Persistence போர்க்கப்பலை நோக்கிச் செல்லும் படையினரையும் வாகனங்களையும் ஏற்றிச்செல்லும் Fast Craft Utility படகு.
RSS Persistence போர்க்கப்பலை நோக்கிச் செல்லும் படையினரையும் வாகனங்களையும் ஏற்றிச்செல்லும் Fast Craft Utility படகு. - படம்: சாவ் பாவ்

இந்த இரு போர்க்கப்பல்களும் படகுகளைச் செலுத்துவதோடு ஹெலிகாப்டர்களைத் தரையிறக்கவும் புறப்படச் செய்யவும் தளங்களைக் கொண்டுள்ளன.

கப்பலிலிருந்து கரைவரை படைகளை ஆகாயம் வழி செலுத்தும் பணியில் CH-47F ரக சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் H225M ஹெலிகாப்டர்கள் ஈடுபடுகின்றன.

இந்தப் பயிற்சியில் முதல்முறையாக ஆளில்லா வானூர்தியும் பயன்படுத்தப்படுகிறது.

ஹெரோன்-1 (Heron-1) எனும் அந்த ஆளில்லா வானூர்திகளையும் ஏஎஹெச் 64டி (AH-64D) ரக ஹெலிகாப்டர்களையும் கொண்டு ஆகாயப்படை ஒருங்கிணைந்த ஆதரவைப் பயிற்சிக்கு வழங்குகிறது.

பத்தாவது முறையாக நடைபெறும் ‘எக்சர்சைஸ் டிரைடன்ட்’ ஆஸ்திரேலியப் படைகளுடன் சிங்கப்பூரின் முப்படைகளும் பயிற்சி செய்யும் பலன் தரும் வாய்ப்பை வழங்குவதாகக் கூறினார் இந்தப் பயிற்சிக்குத் தலைமை வகிக்கும் மூத்த லெஃப்டினன்ட் கர்னல் என்ரிகேஸ் மைக்கல் ஸகரி.

‘எக்சர்சைஸ் டிரைடன்ட்’ பயிற்சிக்குத் தலைமை வகிக்கும் மூத்த லெஃப்டினன்ட் கர்னல் என்ரிகேஸ் மைக்கல் ஸகரி.
‘எக்சர்சைஸ் டிரைடன்ட்’ பயிற்சிக்குத் தலைமை வகிக்கும் மூத்த லெஃப்டினன்ட் கர்னல் என்ரிகேஸ் மைக்கல் ஸகரி. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் சிறிய பரப்பளவை ஒப்பிடுகையில் அதைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு கொண்ட பரந்த நிலப்பரப்பு, விரிந்த கடல் பரப்பளவு, சிங்கப்பூரின் ஆகாயவெளியைவிட பலமடங்கு அதிகமான ஆகாயவெளியில் பயிற்சி செய்வது ஈடுசெய்ய முடியாத வாய்ப்பு என்றார் அவர்.

ராணுவப் படையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ராணுவப் படையை இந்தப் பயிற்சிக்கு வழிநடத்தும் லெஃப்டினன்ட் கர்னல் முகம்மது ஃபஹ்ருல் சாயிட். 
ராணுவப் படையை இந்தப் பயிற்சிக்கு வழிநடத்தும் லெஃப்டினன்ட் கர்னல் முகம்மது ஃபஹ்ருல் சாயிட்.  - படம்: சாவ் பாவ்

இருநாட்டு படைகளின் உத்திகளையும் வழிமுறைகளையும் கற்பது மட்டுமல்லாமல் இருவேறு நாட்டு மக்களின் கலாசாரங்களை அறிந்துகொள்வதற்கும் நல்ல வாய்ப்பாக அமைந்ததாக ராணுவப் படையை இந்தப் பயிற்சியை வழிநடத்தும் மூன்றாவது சிங்கப்பூர் காவலர் பட்டாளத்தின் அதிகாரி லெஃப்டினன்ட் கர்னல் முகம்மது ஃபஹ்ருல் சாயிட் கூறினார். காற்பந்து, ரக்பி என விளையாட்டுகளில் ஈடுபடுவது நட்புறவை வளர்க்கும் தளமாகவும் இந்தப் பயிற்சி இருப்பதாக அவர் சொன்னார்.

கப்பலிலிருந்து கரைவரையிலான பயிற்சிக்குப் பல வகையான, அதிகளவிலான ஆயுதங்கள், வாகனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு இன்றியமையாதது என்று கூறினார் இருபோர்க்கப்பலில் ஒன்றான ‘ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ்’ கப்பலின் தளபத்திய அதிகாரி மேஜர் டேனியல் ஹு.

RSS Persistence போர்க்கப்பலின் தளபத்திய அதிகாரி மேஜர் டேனியல் ஹு.  
RSS Persistence போர்க்கப்பலின் தளபத்திய அதிகாரி மேஜர் டேனியல் ஹு.   - படம்: சாவ் பாவ்

பயணிகள் விமானம், கப்பல் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதியாக இருப்பதால் இவ்வளவு பெரிய பயிற்சியை மேற்கொள்வது சாத்தியம் என்பதையும் அவர் விளக்கினார். மேலும், கடலின் சீற்றம் சிங்கப்பூரைவிட ஆஸ்திரேலியாவில் அதிகமாக இருப்பதால் உண்மை நிலவரத்தின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சியின் ஓர் அங்கமாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் எதிர்கால செயல்முறைகள், தொழில்நுட்பப் பிரிவும் DSO தேசிய ஆய்வுக்கூடமும் (DSO) ஆஸ்திரேலிய தற்காப்புத் துறையின் தற்காப்பு அறிவியல், தொழில்நுட்பக் குழுவுடன் சேர்ந்து அறிவியல், தொழில்நுட்ப பாவனைகளைக் காட்டுவர்.

முதல்முறையாக ஒருங்கிணைந்த கட்டமைப்பைக்கொண்டு ஆளில்லா வானூர்திகளையும் ஆளில்லா தரைத்தள வாகனங்களையும் செயல்பாட்டில் ஈடுபடுத்தியதுடன் 5ஜி தொடர்புக் கட்டமைப்பையும் நகரச் செயல்பாட்டு பயிற்சிக் கூடத்தில் பயன்படுத்தி இருநாட்டுப் படைகளின் நகர்ப்புறச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தன.

சிங்கப்பூர் ஆயுதப்படையையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையையும் சேர்ந்த வீரர்கள், ‘எக்சர்சைஸ் டிரைடன்ட்’ பயிற்சியின் அங்கமாக நகரச் செயல்பாட்டு பயிற்சிக் கூடத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
சிங்கப்பூர் ஆயுதப்படையையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையையும் சேர்ந்த வீரர்கள், ‘எக்சர்சைஸ் டிரைடன்ட்’ பயிற்சியின் அங்கமாக நகரச் செயல்பாட்டு பயிற்சிக் கூடத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். - படம்: தற்காப்பு அமைச்சு

இந்தத் தானியக்க வாகனங்கள் இருநாட்டுப் படையினருக்கு அதிவேகத்தில் நிலப்பரப்பின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கித் தரும் ஆற்றல் கொண்டவை.

ஆஸ்திரேலியச் சமூகத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் தற்காப்பு அமைச்சின் இசை, நாடக நிறுவனம் (Music and Drama Company) ராக்கேம்ப்டன் நகரில் சிங்கப்பூரின் பல்லின மரபுடைமையைப் பறைசாற்றும் ஆடல், பாடல், கதைகள் படைப்பை நவம்பர் 11, 12, 14, 15ஆம் தேதிகளில் இலவசமாகப் படைக்கின்றன.

குறிப்புச் சொற்கள்