சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ), அக்டோபர் 11ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த கூட்டு எண்ணெய்க் கசிவு பயிற்சியில் அரசாங்க அமைப்புகள், தொழில் துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
1998ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்கரைகளை மாசுபடுத்திய பாசிர் பாஞ்சாங் முனைய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்பயிற்சி நடைபெறுகிறது.
இத்தகைய பயிற்சிகள், அரசாங்கமும் தொழில்துறையும் ஒருங்கிணைந்து சிங்கப்பூரில் எண்ணெய்க் கசிவை எப்படி எதிர்கொள்வது என்பதை சோதிக்கும் வகையில் இருக்கின்றன என்று எம்பிஏ தனது அறிக்கையில் தெரிவித்தது.
கலந்துரையாடலைத் தவிர பாசிர் பாஞ்சாங் முனையத்துக்கு அருகே ஜூரோங், புலாவ் புக்கோம் முனைய நடத்துநர்களை உள்ளடக்கி பயிற்சி நடைபெற்றது. அவசரகால நடவடிக்கைகளையும் அவர்கள் செயல்படுத்தினர்.
எண்ணெய்த் திட்டு சிறிய துளிகளாகப் பிரிந்து தண்ணீரில் கலப்பதற்கான ரசாயனம் தெளித்து சோதிக்கப்பட்டது.
இதற்காக தெளிப்பான் பொருத்தப்பட்ட கலன்களை நடத்துநர்கள் பயன்படுத்தினர். அதே சமயத்தில் ஆணையத்தின் சுற்றுக் காவல் படகு சிங்கப்பூர் கடற்பகுதியில் 24 மணி நேர சுற்றுக் காவலில் ஈடுபட்டது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நெதர்தலாந்து கொடியுடன் வந்த படகும் நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூர் கொடி தாங்கிய படகும் மோதியதில் 400 டன் எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செந்தோசா, கெப்பல் பே உள்ளிட்ட கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு மேலாக கடற்கரைகள் மூடப்பட்டன.