‘சிக்கி’ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஜோதி ஸ்டோர் குழும உரிமையாளர் ராஜகுமார்

‘சிக்கி’ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஜோதி ஸ்டோர் குழும உரிமையாளர் ராஜகுமார்

1 mins read
c6090706-4c47-4c18-a1ef-da972d6a2d69
‘தேக்காடாட்எஸ்ஜி’ (TekkaDotSG) தளத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றினார் ஜோதி ஸ்டோர் குழும உரிமையாளர் ராஜகுமார் சந்திரா. - படம்: யோகிதா அன்புச்செழியன்

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவிருப்பதாக ஜோதி ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளர் ராஜகுமார் சந்திரா அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 18) பிஜிபி மண்டபத்தில் நடந்தேறிய ‘தேக்காடாட்எஸ்ஜி’ (TekkaDotSG) தளத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றியபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சபையில் ஓர் உறுப்பினராகத் தமது பயணத்தைத் தொடங்கிய அவர், தற்போது அதன் துணைத் தலைவராக உள்ளார். சபையின் சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கான மையத்தின் (SME Centre) மூலம் ஆண்டுதோறும் 2,800க்கும் மேற்பட்ட வர்த்தகங்களுக்கு ஆலோசனைகளையும் மானியங்களையும் பெற்றுத் தந்துள்ளதை அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற வர்த்தகங்களுக்கு மேலும் உதவவும் இணையத்தில் வர்த்தகங்களின் இருப்பை உறுதிசெய்யவும் தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

“உண்மையைச் சொல்லப்போனால், வாடிக்கையாளர்களின் போக்கு மாறிவிட்டது. இப்போது சிராங்கூன் சாலையில் நடந்து சென்று கடைகளைத் தேடுவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறும் முன்பே தங்களது கைப்பேசிகளில் தேடுகிறார்கள். இணையத்தில் நமது வர்த்தகங்கள் தென்படாவிட்டால், நாம் அவர்களின் தேடலிலேயே இல்லை என்று அர்த்தம்,” என்றார் திரு ராஜகுமார்.

கடைத்தொகுதியில் நின்று வாடிக்கையாளர்களுக்கு நேரில் சேவையாற்றிய, வர்த்தகர்களின் அன்றாடச் சவால்களை நன்கறிந்த ஒருவரே சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

“நான் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த ஆதரவு அனைவரின் கைப்பேசியிலும் இருப்பதை உறுதிசெய்வேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்