ஜேஎஸ் திட்டம்: வேலை தேடுவோர் 1,000 பேர் உதவித்தொகைக்குத் தகுதி

1 mins read
464075c6-ea06-407d-b332-539e066eb3a0
1,000க்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் உதவித்தொகையைப் பெற ஒப்புதல் பெற்றுவிட்டதாக சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை ஆதரவுத் திட்டத்துக்கு (ஜேஎஸ்) அமோக வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு விண்ணப்பித்தோரில் 1,000க்கும் அதிகமானோருக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் எத்தனை பேர் திட்டத்துக்கு விண்ணப்பித்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இவ்வாண்டு முதல் காலாண்டில் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாகப் பதிவானது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான 2.8 விழுக்காட்டைவிட அது சற்று அதிகமாகும்.

திட்டத்துக்கு விண்ணப்பித்து அதற்குத் தகுதிபெறும் ஒவ்வொருவரும் முதல் மாதம் 1,500 வெள்ளி வரையிலான உதவித்தொகையைப் பெறக்கூடும். இரண்டாம் மாதம் 1,250 வெள்ளியும் மூன்றாவது மாதம் 1,000 வெள்ளியும் அவர்கள் பெறலாம். பிறகு எஞ்சிய மூன்று மாதங்கள் ஒவ்வொன்றிலும் அவர்கள் 750 வெள்ளி பெறலாம்.

வேலை தேடுபவர் ஒருவர் அதிகபட்சமாக தனது கடைசி மொத்த சராசரி மாதச் சம்பளத் தொகையைப் பெறலாம். உதாரணமாக மாதந்தோறும் கடைசியாக சராசரியாக 900 வெள்ளி சம்பளம் பெற்ற ஒருவர் அதைவிட அதிகத் தொகையைப் பெறமுடியாது.

உதவித்தொகையைப் பெற விண்ணப்பதாரர்கள் முதல் மூன்று மாதங்கள் ஒவ்வொன்றிலும் 10 புள்ளிகளும் அடுத்த மூன்று மாதங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து புள்ளிகளும் பெறவேண்டும்.

ஆட்குறைப்பு, வர்த்தக மூடல், உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் வேலை இழந்தோருக்கு உதவுவது ஜேஎஸ் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், குறைந்த வருமான, நடுத்தர வருமான சிங்கப்பூரர்களுக்கானது. பெரியவர்களுக்கு இது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்