‘ஐஜூஸ்’ பழச்சாறு இயந்திரத்தில் இருந்த உறிஞ்சுகுழாயை (ஸ்ட்ரா) எடுத்து நாவினால் தடவி மீண்டும் அதே இயந்திரத்தில் வைத்து அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஆடவர்மீது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) நீதிமன்றத்தில் குறும்புச் செயல் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த சகித்துக்கொள்ள முடியாத செயலைக் காணொளியாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் டிடியே கஸ்பார்ட் ஓவன் மெக்ஸ்மிலன் என்ற 18 வயது தனியார்பள்ளி மாணவர்மீது பொதுவெளியில் தொந்தரவு விளைவித்ததாகக் கூடுதல் குற்றமும் சுமத்தப்பட்டது.
ஐஜூஸ் என்ற பெயரில் இயங்கும் இயந்திரங்கள் சுவையான புதிய பழங்களின் சாற்றைப் பிழிந்து வழங்குபவை என்பதால் அவற்றைப் பலர் பயன்படுத்துகின்றனர்.
தாம்சன் ரோட்டில் இருக்கும் கோல்டுஹில் சென்டரில் கடந்த மார்ச் 12ஆம் தேதி, அக்குற்றத்தைச் செய்ததாக மெக்ஸ்மிலன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐஜூஸ் நிறுவனம், அந்த இயந்திரத்தில் இருந்த 500 ஊறிஞ்சு குழாய்களையும் மொத்தமாக மாற்ற வேண்டியிருந்தது.
பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் இன்ஸ்டகிராமில் குறும்புச் செயலை பதிவிட்டார் என்றும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டது.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எண் 5, நேப்பாள் பார்க் முகவரியில் இயங்கும் எஸ்எஸ்இசி (ESSEC) தனியார் வர்த்தகப் பள்ளியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மெக்ஸ்மிலன் மாணவர் என்று அடையாளம் காணப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக அப்பள்ளியிள் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கு மே 22 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது $2,000 அபராதம் விதிக்கப்படலாம். மேலும், சேதம் விளைவித்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சமூகப் பொறுப்பின்றி நடந்துகொண்ட இந்த மாணவரின் செயல் இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

