தரநிலைகளுக்கு உட்படாத உந்து நடமாட்டச் சாதனங்களை வீட்டுக்குள் வைத்திருப்பது ஜூன் 1 முதல் குற்றம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூடுதல் முயற்சி

தரநிலைகளுக்கு உட்படாத உந்து நடமாட்டச் சாதனங்களை வீட்டுக்குள் வைத்திருப்பது ஜூன் 1 முதல் குற்றம்

1 mins read
7fe3544b-7699-4dfa-b3f6-44ca84da44c2
உந்து நடமாட்டச் சாதன வெடிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு, ‘யுஎல் 2272’ தரநிலைகளை எட்டாத சாதனங்களே காரணம் என உள்துறைக்கான இரண்டாவது அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

யுஎல் 2272 (UL 2272) தரநிலைகளை எட்டாத உந்து நடமாட்டச் சாதனங்களை வீட்டுக்குள் வைத்திருப்பது ஜூன் 1ஆம் தேதி முதல் குற்றமாகும் என நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுவரை நிகழ்ந்துள்ள உந்து நடமாட்டச் சாதன வெடிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு, ‘யுஎல் 2272’ தரநிலைகளை எட்டாத சாதனங்களே காரணம் என உள்துறைக்கான இரண்டாவது அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

“அத்தகைய உந்து நடமாட்டச் சாதனங்களை வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் வீட்டில் வைத்திருப்பது குற்றமாகும்,” என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு டோங் குறிப்பிட்டார்.

இத்தகைய சாதனங்களின் விற்பனை, சந்தைப்படுத்துதல் ஆகியவை தொடர்பான விதிமுறைகளை மேலும் வலுப்படுத்தப் போக்குவரத்து அமைச்சு இவ்வாண்டின் பிற்பகுதியில் திட்டமிடுகிறது.

லித்தியம்-அயன் (Lithium-ion) மின்கலன்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு டோங், இன்று நடமாட்டச் சாதனங்களிலும் வாகனங்களிலும் உள்ள இத்தகைய மின்கலன்கள் நாளை மற்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“இத்தகைய மின்கலன்களை எப்படிப் பயன்படுத்திப் பராமரிப்பது, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது உரிய பதில் நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை நாங்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்துவோம்,” என்றார் திரு டோங்.

குறிப்புச் சொற்கள்