தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூன் மாத சில்லறை விற்பனை எதிர்பார்ப்பை மீறி 2.3% வளர்ச்சி

2 mins read
6dc83909-0981-425f-a4bc-402d52059a6f
14 சில்லறை விற்பனைப் பிரிவுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை வளர்ச்சியைப் பதிவு செய்தன. - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 2.3 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளிவிவரத் துறை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.

எல்லாத் துறைகளிலும் விரிவான வளர்ச்சி பதிவானதாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

ஜூன் மாத சில்லறை விற்பனை 2 விழுக்காட்டு என்னும் அளவிலேயே இருக்கும் என தனியார் துறை பொருளியல் நிபுணர்கள், புளூம்பெர்க் ஆய்வில் கணித்ததைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சி பதிவாகி உள்ளது.

மோட்டார் வாகனப் பிரிவைத் தவிர்த்த சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில் 0.4 விழுக்காடு அதிகரித்தது. அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் அது அதிகம்.

இருப்பினும், பருவத்திற்கேற்ப சரிசெய்யப்படும் மாதாந்தர அடிப்படையில் பார்க்கையில், சில்லறை விற்பனை 1.2 விழுக்காடு குறைந்தது. மோட்டார் வாகனப் பிரிவைத் தவிர்த்துவிட்டு கணக்கிடுகையில் அந்தச் சரிவு 1.4 விழுக்காடானது.

ஆண்டு அடிப்படையில், 14 சில்லறை விற்பனைப் பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை வளர்ச்சி கண்டுள்ளன.

வளர்ந்த பிரிவுகளில் பேரங்காடிகள் 1.3 விழுக்காடு, மோட்டார் வாகனங்கள் 14.6 விழுக்காடு, அழகு சாதனம் மற்றும் மருந்துப் பொருள்கள் 4.8 விழுக்காடு, வீட்டுக்குத் தேவையான பொருள்கள் 1.3 விழுக்காடு, பொழுதுபோக்குச் சாதனங்கள் 5.6 விழுக்காடு, கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகள் 5.5 விழுக்காடு, கணினி மற்றும் தொலைத்தொடர்புச் சாதனங்கள் 7.3 விழுக்காடு என அதிகரித்ததாகப் புள்ளிவிவரத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

அதேநேரம் சில துறைகளில் சில்லறை விற்பனை சரிந்துள்ளது. 

பகுதிவாரிக் கடைகள் 0.2 விழுக்காடு, சிற்றங்காடி மற்றும் பல்பொருள் அங்காடி 2.6 விழுக்காடு, உணவு மற்றும் மதுபானம் 5.2 விழுக்காடு, பெட்ரோல் சேவை நிலையங்கள் 5.9 விழுக்காடு, ஆடை ஆபரணம் மற்றும் காலணி 2.6 விழுக்காடு, மற்றவை 10.2 விழுக்காடு என சரிவு பதிவானது.

குறிப்புச் சொற்கள்