சிங்கப்பூரில் சனிக்கிழமை (ஜனவரி 10) இரவு வானில் வழக்கத்தைவிடப் பெரிதாகவும் கூடுதல் ஒளியுடனும் சுடர்விடும் வியாழன் கோளைப் பார்க்க இயலும்.
மரினா அணைக்கட்டு, ஈஸ்ட் கோஸ்ட் பார்க் போன்ற இடங்களிலிருந்து அதனை மிக நன்றாகக் காண முடியும்.
சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதாவது சூரியனுக்கு எதிர்த்திசையில் வியாழன் இருக்கும்போது இத்தகைய வானியல் நிகழ்வு ஏற்படுவதாகச் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் அமைந்துள்ள வானியல் ஆய்வகம் (Observatory), வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை சூரியன் மறையும் வேளையில் வியாழன் கோள் விண்ணில் உதிக்கும். அன்றைய இரவு முழுவதும் அதனைக் காண முடியும் என்று வானியல் ஆய்வகம் குறிப்பிட்டது.
அதைப் பார்ப்பதற்கு எந்தச் சிறப்புச் சாதனமும் தேவைப்படாது. வானம் தெளிவாக இருந்தால் வெறுங்கண்ணால் பார்க்கலாம் என்று கூறப்பட்டது.
வியாழன் கோள், சராசரியாக 13 மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறு பெரிதாகவும் ஒளிமிக்கதாகவும் விண்ணில் தோன்றும். அடுத்து 2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த வானியல் நிகழ்வை எதிர்பார்க்கலாம்.

