ஜூரோங் ஈஸ்ட்டில் அக்டோபர் 9ஆம் தேதி, சாலையைக் கடக்க முயன்ற 64 வயதுப் பெண் மீது கார் மோதியதை அடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 11ஐ நோக்கிச் செல்லும் ஜூரோங் டவுன்ஹால் ரோட்டில் அக்டோபர் 9ஆம் தேதி நடந்த விபத்து குறித்து மாலை 6.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
எஸ்ஜிரோடுவிஜிலான்டெ ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 9ஆம் தேதி பதிவேற்றப்பட்ட காணொளியில், போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்துக்கு மாறியபின் நின்றிருந்த கார்களும் மோட்டார்சைக்கிள்களும் புறப்பட்டுச் செல்வதைக் காணமுடிகிறது.
அவ்வேளையில் மாது ஒருவர் சாலையை வேகமாகக் கடக்க முயல்கையில் கார் அவர் மீது மோதியது.
காரின்முன் கீழே கிடந்த அவரைத் தவிர்க்கும் பொருட்டு, மற்ற கார்களின் ஓட்டுநர்களும் மோட்டார்சைக்கிளோட்டிகளும் சாலையின் மற்ற தடங்களுக்கு மாறி வாகனத்தைச் செலுத்துவதும் அக்காணொளியில் தெரிகிறது. சில பொருள்கள் தரையில் சிதறிக் கிடந்ததையும் காணமுடிகிறது.
மாது நினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காரை ஓட்டிய 33 வயது ஆடவர் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை கூறியது.