ஜூரோங் லேக் வட்டாரத்தில் (ஜேடிஎல்) அமைந்துள்ள கட்டுமானப் பெருந்திட்டத்துக்கான 6.5 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதி, சிறு பகுதிகளாகப் பிரித்து விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறப் பகுதிக்கு வெளியே அமையும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகக் கட்டுமானம் அது. அதற்கான திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட்டதை அடுத்து, இவ்வாறு பிரித்து விற்கப்படுகிறது.
தொடக்கமாக, டவுன் ஹால் லிங்க் வட்டாரத்தில் அடுத்த ஆண்டு (2026) முற்பாதிக்கான ஒதுக்குப் பட்டியலின்கீழ், குடியிருப்புகளும் வர்த்தகக் கட்டடங்களும் கலவையாக அமைந்திருக்கும் வகையிலான கட்டுமானத்துக்கான நிலப்பகுதி ஒதுக்கப்படும். செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் தேசிய வளர்ச்சி அமைச்சு இதனைத் தெரிவித்தது.
இதன் மூலம், மறுஆய்வு செய்யப்பட்ட திட்டத்தையும் ஏலக்குத்தகைக்கான நிபந்தனைகளையும் படித்துப் புரிந்துகொள்ளக் குத்தகைதாரர்களுக்குப் போதிய நேரம் கிடைக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
சொத்து மேம்பாட்டாளர் யாராவது ஏற்றுக்கொள்ளத்தக்க தொகைக்கு வாங்க முன்வந்தால் மட்டுமே அரசாங்கம் ஒதுக்குப் பட்டியலில் இடம்பெறும் நிலப்பகுதிகளை விற்பனைக்கு விடும்.
பொருளியல், சொத்துச் சந்தை நிலவரங்களைக் கருத்தில்கொண்டு, தொழில்துறையினரின் கருத்துகளையும் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் டவுன் ஹால் லிங்க் நிலப்பகுதியைப் பிரித்து விற்க முடிவெடுத்ததாக அமைச்சு கூறியது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் பெருநிறுவனங்கள் முன்மொழிந்த தொகை மிகக் குறைவாக இருந்ததால், ஜேஎல்டி பெருந்திட்டத்துக்கான ஏலக்குத்தகை யாருக்கும் வழங்கப்படவில்லை.
ஜேஎல்டி பெருந்திட்டத்துக்கான மொத்த நிலப்பரப்பில் (365,000 சதுர மீட்டர்) கிட்டத்தட்ட பாதியளவு உள்ளது டவுன் ஹால் லிங்க் நிலப்பகுதி. குத்தகைதாரருக்குத் திட்டத்தை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை இது தரும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சொத்து மேம்பாட்டாளரின் செலவுச் சுமையைக் குறைக்கும் பொருட்டு, அரசாங்கம் சில உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்று அமைச்சு தெரிவித்தது.
டவுன் ஹால் லிங்க் நிலப்பகுதியில் மொத்தம் 186,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்களைக் கட்ட இயலும் என்றும் இதில் குறைந்தது 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலகக் கட்டடங்களும் அதிகபட்சம் 1,200 தனியார் குடியிருப்புகளும் 44,000 சதுர மீட்டர் பரப்பளவில் சில்லறை விற்பனை, ஹோட்டல் அறை போன்றவையும் அமையக்கூடும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது.

