ஜூரோங் வெஸ்ட் பேருந்து விபத்து: இன்னும் ஒன்பது பேர் மருத்துவமனையில்

2 mins read
d383445f-90d5-4ef1-9c74-5121b0092d40
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் வெஸ்ட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கியோரில் ஒன்பது பேர் இன்னமும் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

அவர்களில் எட்டுப் பயணிகளும் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் அடங்குவர். அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் டவர் டிரான்சிட் நிறுவனமும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலத்தபோது கூறின.

மருத்துவமனையில் இருக்கும் பேருந்து ஓட்டுநர், விபத்தில் சேவை 98ஐ ஓட்டிக்கொண்டிருந்தவர். சேவை எண் 98, சேவை 99ன் பின்புறத்தில் மோதியதால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) காலை விபத்து நேர்ந்தது.

சேவை எண் 98ஐ டவர் டிரான்சிட் இயக்குகிறது. எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவை எண் 99ஐ இயக்குகிறது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்தின் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தங்களிடம் பணியாற்றும் ஓட்டுநர்களைத் தொடர்ந்து நன்கு கவனித்துக்கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம், டவர் டிரான்சிட் சிங்கப்பூர், எஸ்பிஎஸ் டிரான்சிட் மூன்றும் தெரிவித்தன. தேவைப்பட்டால் அவர்களுக்கு நிபுணத்துவ மனநல ஆலோசனை வழங்கப்போவதாகவும் அவை குறிப்பிட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.55 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1ல் இந்த விபத்து நிகழ்ந்தது. 44 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

முக்கியமான பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தவும் அதன் பேருந்து ஓட்டுநர்கள் சாலைப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் திங்கட்கிழமை காலையில் டவர் டிரான்சிட் சிங்கப்பூர் தனது பேருந்து பணிமனைகளில் பாதுகாப்பு விளக்கங்களை வழங்கியது.

மேலும், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது.

டிசம்பர் 14ஆம் தேதி காலை 10.55 மணி அளவில் டவர் டிரான்சிட் சிங்கப்பூர் பேருந்து, நின்றுகொண்டிருந்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து மீது மோயதில் 44 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தினால் ஏற்பட்ட வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் எல்டிஏ மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 49 வயது பேருந்து ஓட்டுநர் ஒருவர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் விபத்தில் காயமடைந்த 44 பேரில் 23 பேர் வீடு திரும்பியதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறினார்.

உதவி தேவைப்படும் பயணிகள் டவர் டிரான்சிட் நிறுவனத்தை 1800-248-0950 என்ற எண்ணில் அல்லது feedback@towertransit.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

பாதிக்கப்பட்ட பயணிகள் 1800-287-2727 அல்லது customercare@sbstransit.com.sg என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

குறிப்புச் சொற்கள்