உப்பு குறைந்த உணவுப் பழக்கத்திற்கு மாறுவதினால் ஏற்படும் நன்மையை அந்த உணவு உட்கொள்ள ஆரம்பித்த முதல் ஒரு வாரத்திலேயே காணலாம் என நவம்பர் 11ஆம் தேதி வெளியான அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் சஞ்சிகையில் இடம்பெற்றிருந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில் அவர்களின் உடல்நலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக அது குறிப்பிட்டது.
அதிக சோடியம் உள்ள உணவுப் பழக்கத்திலிருந்து குறைந்த சோடியம் உள்ள உணவுமுறைக்கு மாறிய ஒரு வாரத்தில், ஆய்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினரின் இதயம் சுருங்கும்போது (சிஸ்டோலிக்) இருக்கும் ரத்த அழுத்த அளவு 8 மி.மீ., குறைந்ததாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.
8 மி.மீ., என்பது ஒரு சிறிய அளவு மாற்றம்தான் என்றாலும் அது மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை அது குறைக்கும் என்றும் சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தின் மூத்த இதயநோய் நிபுணரான துணைப் பேராசிரியர் சின் சீ டாங் கூறினார்.
“இந்தச் சிறிய அளவைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஏனெனில், இதயம் சுருங்கும்போது இருக்கும் ரத்த அழுத்த அளவு 5 மி.மீ., குறைந்தாலே அது முக்கிய இதய நோய்களின் அபாயத்தைக் கிட்டத்தட்ட 10 விழுக்காடு குறைக்கும் ஆற்றல் கொண்டது. எளிதில் புரியும்படி சொன்னால், இந்தச் சிறிய அளவு மாற்றம் உடல்நலத்தில் பெரிய அளவு நன்மையை உண்டாக்கும்,” எனச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இதயவியல் நிலையத்தின் மூத்த இதயநோய் நிபுணரான பேராசிரியர் டான் ஹுவாய் சீம் தெரிவித்தார்.


