தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏக்கர்ஸ் விலங்குநல அமைப்பைத் தனியாளாக வழிநடத்தும் கலைவாணன்

2 mins read
aeffe007-2ebb-433b-b3f5-32504e3d2ce7
2025 மே மாதத்தில் ஏக்கர்ஸ் அமைப்பின் ஒற்றைத் தலைவராகத் திரு கலைவாணன் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏக்கர்ஸ் எனப்படும் விலங்கு நலன்கள் ஆய்வு மற்றும் கல்விக்கான சங்கத்தை மற்றொருவருடன் இணைந்து நான்கு ஆண்டுகளாக நடத்திய பின்னர் அதன் தலைவராக உள்ள கலைவாணன் பாலகிருஷ்ணன், 39, இப்போது அதனை தனியொருவராகவே வழிநடத்துகிறார்.

செல்லப்பிராணிகளைப் போல மனிதர்களைப் பொதுவாகக் கவராத வனவிலங்குகளையும் காப்பாற்றும் தனது இலக்கைத் தொடரப்போவதாகத் திரு கலைவாணன் தெரிவித்துள்ளார்.

ஏக்கர்ஸ் அமைப்பில் திரு கலைவாணனுடன் செயல்பட்டு வந்த அதன் இணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால், ஏப்ரல் 30ஆம் தேதியன்று தமது பதவியிலிருந்து விலகினார்.

அடுத்ததாக அவர், பண்ணையில் வளர்க்கப்பட்ட விலங்குகளின் நலன்கள் தொடர்பில் பணியாற்றத் திட்டமிடுகிறார்.

ஏக்கர்ஸ் அமைப்பை நிறுவிய லுயிஸ் இங், அரசியலில் கவனம் செலுத்துவதற்காக பதவி விலகியபோது திரு கலைவாணனும் திருவாட்டி அன்பரசியும், 2021ல் இணைத் தலைமை நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர்.

2015 முதல் 2025 வரை திரு லுயிஸ், நீ சூன் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி நிர்வாகியாகச் செயலாற்றினார். அமைப்பின் கொள்கை பரப்புப் பணிகளை திருவாட்டி அன்பரசி மேலாண்மை செய்துவந்தார்.

வனவிலங்குகளைக் காப்பது, காப்பற்றப்பட்ட விலங்குகளை முறையாக மீண்டும் வெளியே விடுவது போன்ற அன்றாட செயல்பாடுகளைத்  திரு கலைவாணன் நிர்வகித்தார்.

திருவாட்டி அன்பரசி அமைப்பைவிட்டுச் சென்ற பிறகு, நிதி திரட்டுப் பணிகளைத் தாமே ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குத் திரு கலைவாணன் உள்ளாகிறார். இது தமக்குப் பெரும் சவால் என அவர் வர்ணித்தார்.

“எல்லாராலும் பாம்புகள், புறாக்கள் ஆகியவற்றுடன் மனத்தளவில் நெருக்கத்தை உணர முடியாது. எனவே, நிதி திரட்டுவதற்குப் புதிய வழிகளை நாம் கண்டுபிடிக்கவேண்டும்,” என்று திரு கலைவாணன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார். 

கிட்டத்தட்ட 30 பேர் கொண்டுள்ள குழுவினருடன் அவர், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஏக்கர்ஸ் நிதி திரட்டு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இவ்வாண்டு 400,000 வெள்ளியைத் திரட்டுவது இந்த ஆண்டின் நோக்கமாக உள்ளது.

விலங்கு மீட்புக்காக இயங்கிவரும் அந்த அமைப்பின் அவசர எண் சேவை, அமைப்பில் இயங்கி வரும் விலங்கு மருத்துவ சேவை ஆகியவற்றின் செயல்பாட்டுக்கான செலவையும் வனவிலங்கு மீட்பு நிலையத்திற்கான செலவையும் திரட்டப்படும் நிதி சமாளிக்க உதவும்.

தொண்டூழியர்களையும் ஈர்ப்பது மற்றொரு சவால் என்று திரு கலைவாணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்