காலாங் வே வட்டாரத்தில் உள்ள 4.4 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட தொழில்துறைப் பகுதியின் மறுபயன்பாட்டுப் பணிகளுக்கான ஏலக்குத்தகை, கேப்பிட்டாலேண்ட் டிவெலப்மென்ட் (CapitaLand Development) நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதென ஜேடிசி கார்ப்பரேஷன் அமைப்பு புதன்கிழமையன்று (நவம்பர் 20) தெரிவித்தது.
அந்க ஏலக்குத்தகையின் மதிப்பு 369 மில்லியன் வெள்ளி.
அதன்படி கேப்பிட்டாலேண்ட் டிவெலப்மென்ட்டின் துணை நிறுவனமான சிஎல் சேவர் பிராப்பர்ட்டி (CL Savour Property), காலாங் வேயில் உள்ள மூன்று தள தரை ஆலையை (terrace factory) அகற்றாமல் அவற்றின் பயன்பாட்டை மாற்றவேண்டும். 1980களில் கட்டப்பட்ட அந்த ஆலை, சிங்கப்பூரில் எஞ்சியிருக்கும் கடைசி தரை ஆலையாகும்.
அந்தத் தரை ஆலையில் உணவு, பானக் கடைகள், கேளிக்கைக் கூடங்கள், உடலுறுதிக் கூடங்கள் போன்றவை அமைக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் உணவு உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.