அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமது தவணைக் காலம் முடிவதற்கு முன்பு சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
திருவாட்டி ஹாரிஸ், இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா ஆகிய வட்டாரங்களுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) அறிவித்தது. அப்பயணத்தின்போது அவர் சிங்கப்பூர், பஹ்ரேன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அவர் இம்மாதம் 15ஆம் தேதியன்று தலைவர்களைச் சந்திப்பார் என்றும் சாங்கி கடற்படைத் தளத்திற்கு நேரில் செல்வார் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. சிங்கப்பூர் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் திருவாட்டி ஹாரிசுக்கு இஸ்தானா அதிபர் மாளிகையில் மதிய உணவு விருந்து அளிப்பர் என்று வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஹாரிஸ், தமது கணவர் டூக் எம்ஹாஃப்புடன் இப்பயணத்தை மேற்கொள்வார்.
சென்ற ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், இம்மாதம் 20ஆம் தேதியன்று அதிபராகப் பொறுப்பேற்பார். தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருவாட்டி ஹாரிசின் தவணைக் காலமும் அன்றைய தினம்தான் நிறைவடைகிறது.

