‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம் 2026’ இயக்கம் அறிமுகம்

‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம் 2026’ இயக்கம் அறிமுகம்

3 mins read
894ca9c1-07b5-4077-ab8d-de13466297b5
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினரான தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (சிவப்புச் சட்டை), கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (இடமிருந்து மூன்றாமவர்) உள்ளிட்ட விருந்தினர்கள். - படம்: பொதுச் சுகாதார மன்றம்
multi-img1 of 2

அசுத்தமான பொதுக் கழிவறைகள், உணவு, பானங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் விடுவது, தூய்மையற்ற உணவங்காடி மேசைகள் ஆகியவற்றைப் பொதுவான தூய்மைப் பிரச்சினைகள் என்று சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வில் கலந்துகொண்டோர் கூறியுள்ளனர்.

பொதுச் சுகாதார மன்றம், கடந்த மார்ச் மாதம், குடியிருப்பாளர்கள் 411 பேரிடம் ஆய்வு நடத்தியது. அவர்களுள் 390 பேர், 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். அந்தப் பிரிவினரில் 74 விழுக்காட்டினர், 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிடச் சிங்கப்பூர் தற்போது மேலும் தூய்மையாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மன்றம் அதன் 15ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

இதில் கலந்துகொண்ட 99 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் சிங்கப்பூரின் தூய்மையைத் தக்கவைக்கப் பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

தூய்மையான சிங்கப்பூர் இயக்கம்

சிங்கப்பூர்த் தூய்மை தினத்துடன் இணைந்து, மன்றத்தின் 15ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டமும் இடம்பெற்றது.
சிங்கப்பூர்த் தூய்மை தினத்துடன் இணைந்து, மன்றத்தின் 15ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டமும் இடம்பெற்றது. - படம்: பொதுச் சுகாதார மன்றம்

பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதில் அனைவருக்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்தும் வகையில், ‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம் - இதில் நம் அனைவருக்கும் பங்குண்டு!’ எனும் கருப்பொருளுடன் இயக்கமொன்றை மன்றம் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் உள்ள ஜெனியோவில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

“சிங்கப்பூர், உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக மாறியது தற்செயலானதன்று. இது, அமரர் திரு லீ குவான் யூ உள்ளிட்ட தலைவர்களால் திட்டமிடப்பட்ட உத்திபூர்வ முயற்சிகளின் விளைவாகும்,” என்றார் அவர்.

தொடர்ந்து, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த சிங்கப்பூரை வழங்குவதை உறுதிசெய்வது நமது கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர்த் தூய்மை தினத்தைக் கொண்டாடும் வகையிலும் அமைந்த இந்நிகழ்ச்சியில் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தூய்மை இயக்கப் பங்காளித்துவ அமைப்புகளைச் சேர்ந்தோர் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்த இயக்கம், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதிவரை ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.

இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், சிங்கப்பூர்த் தூய்மை தினத்தைக் குறிக்கும் வகையிலும், ஏப்ரல் 19ஆம் தேதியன்று குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், சமூக இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இயக்கம் நடைபெறும் ஒருமாத காலத்தில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

பங்காளித்துவ அமைப்புகளின் ஆதரவு

தூய்மை குறித்த செய்திகளைப் பரப்ப, கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் ஓராண்டுக்கான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.
தூய்மை குறித்த செய்திகளைப் பரப்ப, கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் ஓராண்டுக்கான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. - படம்: பொதுச் சுகாதார மன்றம்

இந்நிகழ்ச்சியில், 16 வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்களில் தூய்மை குறித்த செய்திகளைப் பரப்ப, கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் ஓராண்டுக்கான புரிந்துணர்வுக் குறிப்பும் கையெழுத்திடப்பட்டது.

பங்காளித்துவ அமைப்புகளின் உதவியுடன் தீவு முழுவதும் அமைந்துள்ள 26 தூய்மைச் சேமிப்பகங்கள் (CleanPods), பொதுக் கழிவறைத் தூய்மையை மேம்படுத்தும் அக்கம்பக்கச் சமூகக் கழிவறைக் குழு உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தூய்மை தொடர்பான முன்னெடுப்புகளை மன்றம் மேற்கொள்கிறது.

இந்நிலையில், ‘ரைஸ்’ (R.I.S.E) ஆர்வலர் கட்டமைப்பு, நிறுவனச் செயல்பாட்டுக் கட்டமைப்பு விருது, ‘கிளீன்ஹூட்’ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

குப்பை பொறுக்குதல், உணவு வீணாகாமல் தடுத்தல் உள்ளிட்ட முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் செங்ஹுவா இளையர் கட்டமைப்பு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் ‘தங்க நிலை’ விருது பெற்றது.

அவ்வமைப்பைச் சேர்ந்த உதயநிதி சிதம்பரம், 25, “இளையர்களை அடிப்படையாகக் கொண்ட குழுவாக இருப்பதால், பள்ளி மாணவர்கள், இளையர்களைத் தொடர்ந்து ஈர்த்து, தூய்மை தொடர்பில் செயலாற்ற விரும்புகிறோம். அடுத்த தலைமுறைக்கு இது குறித்துக் கற்பித்து அவர்களை இதில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம் என உறுதியாக நம்புகிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்