மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்றுக்கு இணங்க தமிழ் முரசு அண்மைய ஆண்டுகளில் பன்மடங்கு உருமாறி நவீன வழிகளில் வாசகர்களைக் கவர்ந்து வருகிறது.
எழுத்து வடிவத்தில் இணையத்திலும் அச்சிலும் செய்திகளை வெளியிடுவது தமிழ் முரசின் முதன்மைப் பணியானாலும் இன்றைய வாசகர்களின் வெவ்வேறு ரசனைகளுக்கு ஏற்றவாறு காணொளிகள், வலையொளிகள், கருத்து விளக்கப்படங்கள், நேரலை என்று பன்முக ஊடகமாக உருவெடுத்துள்ளது.
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் முரசு கைப்பேசிச் செயலி. இவ்வாண்டிற்கான அனைத்துலக செய்தி ஊடகச் சங்க (INMA) விருதுகளில் தமிழ் முரசு செயலி வெள்ளி விருதைத் தட்டிச் சென்றது. மொத்தம் 20 பிரிவுகளில் 49 நாடுகளிலிருந்து 839 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தமிழ் முரசு இரண்டாமிடம் பிடித்தது தமிழுக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.
இருமொழிப் பயன்பாடு, இளையர்களுக்கான அம்சங்கள், இருவழித் தொடர்புத் தொழில்நுட்பம், காணொளிகள், வலையொளிகள் என்று அதன் செயலி வழங்கும் பலவித சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் இவ்விருது கடந்த மே 22ஆம் தேதி தமிழ் முரசுக்கு வழங்கப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 27,000 முறை தமிழ் முரசு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் முரசின் மின்னிலக்கப் பாதையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு முக்கியம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாகத் தமிழ் முரசின் ஒவ்வொரு செய்திக்கும் 50 முதல் 100 சொற்களுக்குள் ஆங்கிலச் சுருக்கம் வழங்கப்படுகிறது. தமிழில் படிக்க சவால்கள் உள்ளவர்களுக்கும் தமிழர்கள் அல்லாத மற்ற இனத்தவர்களும் செய்திகளை அறிந்துகொள்ள இவ்வசதி வழிவகுக்கிறது.
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் செய்தி வழங்குவதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் தமிழ் முரசும் எஸ்பிஎச் மீடியாவும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
தமிழ் முரசு செயலிவழி செய்திகளை ஒலி வடிவிலும் கேட்கலாம். ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், குரல்வழி அச்செய்தியைக் கேட்கலாம். அக்குரலை மனிதக் குரல்போல் கொண்டுவர செயற்கை நுண்ணறிவு உதவலாம். அடுத்த சில மாதங்களுக்குள் செயற்கை நுண்ணறிவுகொண்டு அந்தக் குரல் மேம்படுத்தப்படும் என்பதை வாசகர்கள் எதிர்பார்க்கலாம்.
மின்னிலக்கம் என்றால் சமூக ஊடகத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அவ்வகையில், தற்போது தமிழ் முரசு முதன்மையாக இயங்கும் சமூக ஊடகத் தளங்களில் 300,000க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள் என்பது பெருமைக்குரியது. ஃபேஸ்புக்கில் 142,000, டிக்டாக்கில் 118,000, இன்ஸ்டகிராமில் 48,000, வாட்ஸ்அப்பில் 15,000, யூடியூப் 7,900, டெலிகிராமில் 2,100 என்று சமூக ஊடகத் தளங்களில் பேரளவில் வாசகர்களைத் தமிழ் முரசு ஈர்த்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வளர்ச்சிக்குக் காணொளி, வலையொளிப் படைப்புகள் கைகொடுத்து வருகின்றன. வார நாள்களில் நாளும் இடம்பெறும் ஒரு நிமிடச் செய்தி, ஐந்து முக்கியச் செய்திகள், காணொளிகள் உட்பட 2024ஆம் ஆண்டில் மொத்தம் 905 காணொளிகள் படைக்கப்பட்டன. அவை 32 மில்லியன் முறை பார்க்கப்பட்டன.
எண்ணிக்கைகளையும் விருதுகளையும் பெற்றுவிட்டதால் மேம்பாட்டு முயற்சிகள் ஓயப்போவதில்லை. சிங்கப்பூரிலும் உலக அளவிலும் வாழும் தமிழர்களைப் போய்ச் சேரும் வகையில் காலத்திற்கேற்ப தமிழ் முரசும் தொடர்ந்து தன்னை தகவமைத்துக்கொண்டே இருக்கும்!