‘கேலோங் கிங்’ வில்சன் ராஜ் ஆள்கடத்தல் வழக்கில் குற்றவாளி

2 mins read
e3890d2a-0dfc-42a5-bd60-e071515368a9
60 வயது வில்சன் ராஜ் பெருமாளுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிங்கப்பூரிலிருந்து தப்பி ஓடிய வில்சன் ராஜ் பெருமாள், ஹங்கேரியில் அரசாங்கத் தரப்பு சாட்சியாகச் செயல்பட்டு இவ்வளவு காலம் தண்டனைகளைத் தவிர்த்தார்.

காற்பந்து ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயித்த குற்றம் தொடர்பான வழக்கில் அவர் அரசாங்கத் தரப்பு சாட்சியாக இருந்தார்.

ஆனால், ஹங்கேரியில் அவர் மீது ஆள்கடத்தல் குற்றம் விதிக்கப்பட்டது.

இதில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரியில் கடந்த மே மாதத்தில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் அதுதொடர்பான செய்தி வெளியிடப்படவில்லை.

60 வயது வில்சன் ராஜ் பெருமாளுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்சன் ராஜ் பெருமாளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக ஹங்கேரியின் ஹஜ்டு-பிஹார் மாநிலத்தின் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகச் செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதால் அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

மேல்முறையீட்டு வழக்கின் தேதிகள் தெரிவிக்கப்படவில்லை.

ஆள்கடத்தில் குற்றத்துடன் வில்சன் ராஜ் பெருமாளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததும் விசாரணை நடத்தப்பட்டது.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

வில்சன் ராஜ் பெருமாள் 2012ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் வசித்து வருகிறார்.

வில்சன் ராஜ் பெருமாள் ஒரு காலத்தில் ‘கேலோங் கிங்’ என அழைக்கப்பட்டார்.

‘கேலோங்’ என்றால் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிப்பது (பணம் வாங்கிவிட்டு ஆட்டத்தில் தோல்வி அடைவது).

ஹங்கேரியச் சட்டத்தின்கீழ், ஆள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்டோர் கடத்தப்பட்டது பாலியல் தொழிலுக்காகவா அல்லது கொத்தடிமையாக இருப்பதற்காகவா என்பது ஆராயப்பட்டு அதன்படி தண்டனை விதிக்கப்படும்.

வில்சன் ராஜ் பெருமாளைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வர சிங்கப்பூர் காவல்துறை முயற்சி செய்திருந்தது. ஆனால் 2014ஆம் ஆண்டில் ஐரோப்பியச் சட்டங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை,

ஆட்டத்தின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் குற்றங்கள் தொடர்பாக 2011ஆம் ஆண்டில் பின்லாந்துக் காவல்துறை வில்சன் ராஜ் பெருமாளைக் கைது செய்தது. பிறகு அவர் ஹங்கேரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்