சீர்திருத்தக் கட்சித் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் காலமானார்

சீர்திருத்தக் கட்சித் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் காலமானார்

2 mins read
d70259d2-18a2-4844-a0ac-82cc0cbebd05
குடும்பத்தினர் சூழ, கென்னத் ஜெயரத்னம் தூக்கத்திலேயே அமைதியாக உயிர் நீத்ததாக அவரின் மனைவி தெரிவித்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம், சனிக்கிழமை (ஜூலை 18) காலமானார். அவருக்கு வயது 67.

திரு கென்னத்தின் மறைவை அவருடைய மனைவி அமெண்டா ஜெயரத்னம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அறிவித்தார். குடும்பத்தினர் சூழ, திரு கென்னத் தூக்கத்தில் அமைதியாக உயிர் நீத்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

“தற்போது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சிறிய அளவிலான இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அவரது வாழ்வைக் கொண்டாடும் வகையிலான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு தேதியில் ஏற்பாடு செய்யப்படும்,” என்று அவர் அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.

திரு கென்னத், மறைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.பி.ஜெயரத்னத்தின் மூத்த மகன்.

1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பிறகு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சி அரசியல்வாதியாக திரு ஜே.பி. ஜெயரத்னம் திகழ்ந்தார். 

பல்லாண்டுகளாகப் பாட்டாளிக் கட்சியில் செயல்பட்ட திரு ஜே.பி. ஜெயரத்னம், 2008ல் சீர்திருத்தக் கட்சியைத் தோற்றுவித்தார். அதே ஆண்டின் பிற்பகுதியில் அவர் காலமானார்.

தந்தையின் மறைவுக்குப் பின்னர் மே 2009ல் சீர்திருத்தக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை திரு கென்னத் ஏற்றுக்கொண்டார்.

மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட அவர், 2011, 2015 தேர்தல்களில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலும் 2020ல் அங் மோ கியோ குழுத்தொகுதியிலும் களம் கண்ட சீர்திருத்தக் கட்சியின் வேட்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.   

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சீர்திருத்தக் கட்சி போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் அது வெற்றி பெறவில்லை.

அத்துடன், 2013ல் நடைபெற்ற இடைத்தேர்தல் ஒன்றிலும் திரு கென்னத் போட்டியிட்டார். 

மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் பாமர், தகாத உறவில்  ஈடுபட்ட காரணத்தால் அக்கட்சியிலிருந்தும் பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். 

அதன் பிறகு அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட திரு கென்னத்தும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் டெஸ்மண்ட் லிம்மும் இணைந்து மொத்த வாக்குகளில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே பெற்றனர்.

மக்கள் செயல் கட்சியின் கோ போ கூனும் போட்டியிட்ட அந்தத் தொகுதிக்கான நான்கு முனைப் போட்டியில், பாட்டாளிக் கட்சி வேட்பாளர் லீ லி லியன் வென்றார்.

குறிப்புச் சொற்கள்