கெப்பல் நிறுவனம், தரவு நிலையங்கள், கடலடிக் கம்பிவடங்கள் (subsea cables), மறுபயனீட்டு எரிசக்தி ஆகியவற்றின் தொடர்பில் அமசோன் வெப் செர்விசஸ் (Amazon Web Servies - ஏடபிள்யுஎஸ்) தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபடவுள்ளது.
அந்தப் பங்காளித்துவம் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 5) அறிவிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பின்பற்றுவதைத் துரிதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் அந்தப் பங்காளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.
செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடனான தரவு நிலையங்களுக்கென உள்கட்டமைப்புத் தீர்வுகளை வழங்குவது, புதிய கடலடிக் கம்பிவடங்களை அமைப்பது, மறுபயனீட்டு எரிசக்தித் திட்டங்கள் ஆகியவற்றின் தொடர்பில் ஏடபிள்யுஎஸ் நிறுவனத்துக்கு கெப்பல் தீர்வுகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமசோன் நிறுவனத்தின் ‘அமசோன் பெட்ராக்’ (Amazon Bedrock) தளத்தைக் கொண்டு கெப்பலின் செயற்கை நுண்ணறிவுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கெப்பலின் செயற்கை நுண்ணறிவுத் தளம், உற்பத்தித் திறனுக்கு மெருகூட்டுவதுடன் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் முக்கியத் தளமாக விளங்கும் என்றும் கெப்பல் தெரிவித்தது.
‘அமசோன் பெட்ராக்’, செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட முறைகளை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவும்.
தரவு நிலையங்கள், நவீன தொடர்பாற்றல் தீர்வுகள் (advanced connectivity solutions) ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் என்று கெப்பலுக்கு இருக்கும் பெயரை இந்தப் பங்காளித்துவம் வலுப்படுத்தும் என்றார் கெப்பலின் தொடர்பாற்றல் (connectivity) பிரிவின் தலைமை நிர்வாகியான மன்ஜோத் சிங் மன்.
“ஏடபிள்யுஎஸ்ஸின் உலகளாவிய இலக்குகளுக்கு ஆதரவளித்தபடி கெப்பல் வழங்கும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கு மெருகூட்டும் வகையில் தொடர்பாற்றல், நீடித்த நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு, கரிமப் பயன்பாடு சம்பந்தப்பட்ட தீர்வுகள் ஆகியவற்றின் தொடர்பில் இந்தப் பாங்காளித்துவம், புத்தாக்கத்தை ஊக்குவிக்கிறது,” என்று திரு மன்ஜோத் சிங் மன் குறிப்பிட்டார்.