தெங்கா பிடிஓ வீடுகளுக்கான குளிரூட்டி வசதியைக் கெப்பல் நிர்வகிக்கும்

தெங்கா பிடிஓ வீடுகளுக்கான குளிரூட்டி வசதியைக் கெப்பல் நிர்வகிக்கும்

2 mins read
46400a17-a258-4d0a-abfa-e224646056a3
தெங்காவில் ஏறக்குறைய 10,000 வீடுகளுக்கான மத்திய குளிரூட்டிக் கட்டமைப்பை கெப்பல் நிறுவனம் நிர்வகிக்கும். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

தெங்கா வட்டாரத்தில், தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளின் மத்தியக் குளிரூட்டிக் கட்டமைப்பை உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான கெப்பல் நிர்வகிக்கவிருக்கிறது.

தெங்காவில் கூடுதலாக ஒன்பது பிடிஓ வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன.

தெங்காவின் பிரிக்லெண்ட், பார்க் அண்ட் ஃபாரஸ்ட் ஹில் ஆகிய பகுதிகளில் அமையவுள்ள ஏறக்குறைய 10,000 வீடுகளுக்கான மத்திய குளிரூட்டிக் கட்டமைப்பை கெப்பல் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் கெப்பல் நிறுவனமும் அதுகுறித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகாரபூர்வ கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

இதற்குமுன், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மூன்று பிடிஓ திட்டங்களின் குளிரூட்டிக் கட்டமைப்புகளை நிர்வகிக்கும் குத்தகை கெப்பல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்தத் திட்டங்களின் கட்டுமானம் இன்னும் நடைபெறுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் 14,000 வீடுகளுக்கான குளிரூட்டி வசதிகளைக் கெப்பல் நிறுவனம் நிர்வகிக்கும்.

தெங்கா வட்டாரத்தில் கழக வீடுகளை வாங்குவோர் மத்திய குளிரூட்டி வசதியைப் பெற விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய குளிரூட்டிக் கட்டமைப்பு மூலம் எரிசக்திப் பயன்பாடு கிட்டத்தட்ட 30 விழுக்காடு குறைந்துள்ளது. வீட்டில் பொருத்தப்படும் வழக்கமான குளிரூட்டி இயந்திரங்களைவிட மத்திய குளிரூட்டிக் கட்டமைப்பு எரிசக்தியை மிச்சப்படுத்த உதவுகிறது.

தெங்கா வட்டாரத்தில் 17 பிடிஓ திட்டங்களின்கீழ் உள்ள வீடுகளுக்கான மத்திய குளிரூட்டிக் கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான குத்தகை முதல்முறையாக எஸ்பி குழுமத்துக்கு வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டைக்கின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட மத்திய குளிரூட்டிக் கட்டமைப்பில் நீர் ஒழுகுவதாக புகார்கள் வந்தன.

கொவிட்-19 நோய்ப்பரவலால் ஏற்பட்ட கட்டுமான தாமதங்கள் அதற்குக் காரணம் என்று நிறுவனம் சொன்னது.

அதையடுத்து 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எஸ்பி குழுமத்தின் மத்திய குளிரூட்டி வசதியைப் பெற 9,000க்கும் அதிகமானோர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டில் அது 10,600ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்