தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்புகள்

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி, அதிக இணைப்பாட நடவடிக்கைகள்

5 mins read
f918891d-42fe-43f1-9aee-8aaab3de0d3b
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ஐடிஇ) படிக்கும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை வேலைக்குத் தயார்செய்ய அதிக ஆதரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறப்புக் கல்வி, திறன் மேம்பாடு முதல் இணைப்பாட நடவடிக்கைகள் வரை கல்வி அமைச்சு பல தரப்பட்ட அறிவிப்புகளை வியாழக்கிழமை (பிப்ரவரி 6) நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ஐடிஇ) படிக்கும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை வேலைக்குத் தயார்செய்ய அதிக ஆதரவு வழங்கப்படும். அதற்கான புதிய திட்டத்தில் அவர்களுக்கு வேலையிடப் பயிற்சி வழங்கப்படும் என்று கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்தார்.

ஐடிஇ-எஸ்ஜி எனேபல் வேலையிடப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுத் திட்டம் 2024ஆம் ஆண்டின் மத்தியில் சோதிக்கப்பட்டது. வேலையிடத் தொடர்பு, நேர்காணலுக்குத் தயாராவது ஊழியர் அணியில் சேர தயார் செய்வது போன்றவற்றுக்கு இதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுவரை ஏறக்குறைய 100 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளர்கள். ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கையை 250க்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கல்வி (Sped) பள்ளிகளின் ஆற்றலை மேம்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்களும் மின்னிலக்க கருவிகளும் இதற்குப் பயன்படுத்தப்படும்.

ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைப்பதற்கு மின்னிலக்க வழியில் தீர்வு காணவும் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

இது, தற்போதைய கல்வி அமைச்சின் கட்டமைப்புகள் சிறப்புக் கல்விப் பள்ளிக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால் கல்வியாளர்கள் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்தி கற்றல் பயனை மேம்படுத்த முடியும்.

மேலும், 2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு கற்பித்தல் மற்றும் கற்றல் பாடத்திட்டங்களில் இறுதி இரண்டு பாடங்களுடன் தேசிய சிறப்புக் கல்வி பாடத்திட்டம் நிறைவடைந்துள்ளது.

அறிவாற்றலைப் பகிர்ந்துகொள்ள அதிக வழிகளும் ஏற்படுத்தப்படவிருக்கிறது.

நிபுணத்துவத்தை ஆழப்படுத்தவும், நல்ல நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், சமூக நடைமுறை அல்லது உடல்குறையுள்ளவர்களின் தேவைகளில் நிபுணத்துவம் பெற்ற குழுக்கள் அமைக்கப்படும்.

இந்தக் கட்டமைப்புகளை உருவாக்க சமூக சேவை அமைப்புகள், சிறப்புக் கல்வி பள்ளிகளுடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்படவிருக்கிறது. இது, கல்வியாளர்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து, உடற்குறையுள்ளோர் பற்றிய புரிதலை ஆழப்படுத்தும்.

தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ ) முன்னேற்ற விருதும் (ஐபிஏ) விரிவுபடுத்தப்படுகிறது.

சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக ஐடிஇ பட்டதாரிகள் முன்னதாகவே பட்டயப் படிப்புக்கு முன்னேற உதவும் திட்டம் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து மேலும் நீட்டிக்கப்படும். சிங்கப்பூர் ஊழியரணி திறன் தேர்ச்சித் திட்டத்தின்கீழ் (WSQ) பட்டயப் படிப்பைத் தொடரும் 30 வயதுக்குட்பட்டவர்களையும் இது உள்ளடக்கும் என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐடிஇ முன்னேற்ற விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு தகுதியான ஐடிஇ பட்டதாரிகளுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டது. ஐடிஇ, பலதுறைத் தொழிற்கல்லூரி, NAFA, லாசால் மற்றும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக்கழகம் ஆகியவை வழங்கும் பட்டயக்கல்விகளில் சேருவோர் தங்களின் உயர்நிலைக் கல்விக் கணக்கில் 5,000 வெள்ளி பெறுவார்கள். பட்டயப் படிப்பை முடித்தவுடன், அவர்களது மத்திய சேம நிதி சாதாரண கணக்கில் மேலும் $10,000 நிரப்பப்படுகிறது.

தற்போது, ​​முப்பது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய சுமார் 100 ஐடிஇ பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஊழியரணி திறன் தேர்ச்சித் திட்ட பட்டயப் படிப்பை மேற்கொள்வதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐடிஇ முன்னேற்ற விருது நீட்டிப்பதால், அதிக தகுதி வாய்ந்த ஐடிஇ பட்டதாரிகள் WSQ பட்டயப் படிப்பை மேற்கொள்ள முடியும் என்று அது மேலும் கூறியது. ஒரு முறை ஏற்பாடாக, 2025 ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி WSQ பட்டயப் படிப்பில் ஏற்கனவே பதிவுசெய்துள்ள அனைத்து சிங்கப்பூர் ஐடிஇ பட்டதாரிகளுக்கும் வயதைப் பொருட்படுத்தாமல் ஐடிஇ முன்னேற்ற விருது வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டது.

2025 ஜூன் 1 முதல் 2025 டிசம்பர் 31 வரை WSQ பட்டயப் படிப்பில் சேரும் 31 வயதுடைய சிங்கப்பூர் ஐடிஇ பட்டதாரிகளுக்கும் இது பொருந்தும். இந்த ஒரு முறை ஏற்பாட்டின் மூலம் சுமார் 50 ஐடிஇ பட்டதாரிகள் பயனடைவார்கள் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டது.

இந்த ஐடிஇ முன்னேற்ற விருதால் 2024ஆம் ஆண்டில் பட்டயப் படிப்பில் சேர்ந்த அல்லது முடித்த ஏறக்குறைய 12,000 ஐடிஇ பட்டதாரிகள் பயனடைந்துள்ளனர். இதற்கு மொத்தம் 90 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது.

பணியிடைக்கால ஊழியர்களுக்கான பயிற்சிப் படியையும் கல்வி அமைச்சு மேம்படுத்துகிறது.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், முழுநேர பயிற்சி படித் தொகைக்கான விண்ணப்பம் மார்ச் 10ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. தகுதியான திட்டங்களில் ஏற்கெனவே சேர்ந்தவர்களும் சேர விருப்பமுள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், 40 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து சிங்கப்பூரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட முழுநேர படிப்புகளுக்கான மாதாந்திர பயிற்சி படித்தொகையாக $3,000 வரை பெறுவார்கள். ஒரு ஊழியருக்கு இது அதிகபட்சமாக $72,000 வரை இருக்கும். உயர்கல்வி நிலையங்கள் மற்றும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத் தொழில் மாற்றும் திட்டத்தின்கீழ் 600க்கும் மேற்பட்ட முழு நேரத் திட்டங்கள் இதற்குத் தகுதி பெறும்.

சென்ற பிப்ரவரி 18ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் தனது வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து தகுதியுள்ள பகுதிநேர பயிற்சிகளுக்கான படித் தொகை நீட்டிக்கப்படுகிறது. முழுநேர மற்றும் பகுதி நேரப் பயிற்சிக்கு 24 மாதங்கள் வரை ஆதரவு வழங்கப்படும். பகுதி நேர படிப்பின்போது புத்தகங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற தற்செயலான பயிற்சி செலவுகளை ஆதரிக்க தகுதியான நபர்கள் மாதம் 300 வெள்ளி பெறுவார்கள். பகுதி நேர அடிப்படையில் திறனை மேம்படுத்திக் கொண்டே தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் பணியிடைக்கால ஊழியர்களுக்கு கற்றல் செலவினங்களை குறைக்க இது உதவும் என்று பிரதமர் வோங் கூறியிருந்தார்.

அதிக விளையாட்டு, இணைப்பாடங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.

2025ஆம் ஆண்டில் மாணவர்கள் படகு வலித்தலையும் 2026ஆம் ஆண்டில் ஹாக்கி விளையாட்டையும் இணைப்பாடங்களாக சேர்த்துக் கொள்ள முடியும்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளிகளின் இணைப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பால் அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது என்று நாடாளுமன்றத்தில் பேசிய கல்விக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு- கலாசார சமூக, இளையர்துறை பங்காளித்துத்தின்கீழ் தற்போது 22 பள்ளிகளைச் சேர்ந்த 35 மாணவர்கள் படகு வலித்தல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் தற்போதைய இணைப்பாட நடவடிக்கைகளாக தடகளப் போட்டிகளும் இருக்கின்றன. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவர்கள் 2025ல் சேர்ந்தனர். மேலும் வாட்டர் போலோவில் 50 பள்ளிகளைச் சேர்ந்த 77 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்