குவாங்சு: தற்போது உருவெடுத்து வரும் வர்த்தக வரிக் கட்டமைப்பு சவால்களை மட்டும் உருவாக்கவில்லை; வாய்ப்புகளையும் வழங்குவதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலத்தில் உருவாகும் அந்த வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வரிக்கட்டமைப்பு உருவாக்கித் தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“அடுத்து வரக்கூடிய குறுகிய காலத்தில் புதிய வரிவிதிப்பு முறை எல்லா நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக உலகப் பொருளியல் மாற்று வடிவம் காணும். விநியோகத் தொடர்களிலும் மாற்றம் பிரதிபலிக்கும்,
“அதே நேரம், நீண்டகாலப் போக்கில் வரிவிதிப்பு முறை நமக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்து வரும் புதிய வரிகளைக் குறிப்பிட்டு அவர் அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், சீனாவுக்கு ஐந்து நாள் வருகை மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தைத் தொடக்க நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 1) குவாங்டோங் மாநில ஆளுநர் வாங் வெய்ஜோங்கை அந்த மாநிலத் தலைநகர் குவாங்சுவில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, குவோங்டோங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நீண்டகால மக்கள்தொடர்பு மற்றும் வலுவான பொருளியல் ஒத்துழைப்பை அவர்கள் இருவரும் மறுஉறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனா-சிங்கப்பூர் குவாங்சு அறிவார்ந்த நகரத் திட்டம் (CSGKC) 15வது ஆண்டைத் தொட்டுள்ள வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவாற்றல் பகிர்வுக்கு அந்தத் திட்டம் தொடர்ந்து உதவும்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான பயனுள்ள தளமாகவும் அது நீடிக்கும் என்பதை திரு கானும் ஆளுநர் வாங்கும் ஒப்புக்கொண்டதாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் தெற்கு வட்டார வர்த்தக, உற்பத்தி மையமாக குவாங்டோங் மாநிலம் விளங்குகிறது.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிவகுப்பில் புதன்கிழமை (செப்டம்பர் 3) பங்கேற்பதும் திரு கானின் பயணத் திட்டத்தில் அடங்கும்.